பக்கம்:இரவு வரவில்லை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. சிரித்தாளே!


குட்டை நிறைந்தது ஊரோரம்!-பூத்த
குளத்துச் சிரித்தது தாமரையும்!
அட்டிகைப் பொன்மணி மீனினங்கள்-வர
அணைத்துத் தழுவிச் சிரித்தாளே!
1


வானம் இருண்டது கீழ்வானில்!-பூக்கள்
வாயுள் சிரித்து மகிழ்ந்தனவாம்!
போன இடமெங்கும் வந்துநின்றாள்-கண்டு;
பூரித்தாள்; நின்று சிரித்தாளே!
2


காளை முழக்கிற்று வீட்டோரம்!-நாகு
கட்டை அறுத்துக் கிளம்பியது!
தாளை விலக்கிக் கடைதிறந்தேன்!-என்னைத்
தாவி அனைத்தாள்; சிரித்தாளே!
3


தீந்தமிழ் பாடிற்று நீளோடை!-குளிர்
தென்றல் அணைத்தது நாணலெலாம்!
பூந்தளிர் அந்தித் தீயொளியின்-செம்மை
பூத்தது வந்தாள்; சிரித்தாளே!
4


இன்பத் தமிழ்ப்பாடல் இளஞ்சிறுவர்-ஆடும்
இரைச்சல் அடங்கிற்று வீட்டினிலே!
துன்பம் மறந்திட நூலெடுத்தேன்-ஒடித்
தோட்புறம் வந்தாள்; சிரித்தாளே!
5


22
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/31&oldid=1179801" இலிருந்து மீள்விக்கப்பட்டது