பக்கம்:இரவு வரவில்லை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. இதுவா கைம்மாறு?


சிற்றூரில் நானிருந்தேன்; சிறுவன் வந்தான்;
‘காந்தியை ஒருவெறியன் சுட்டான்’ என்றான்;
பற்றற்ற அவர்மறைவைக் கேட்டு நெஞ்சம்
பதறினேன்; அசையாத பொருள்கள் யாவும்
சுற்றிற்றென் கண்முன்னே! அந்தோ! மக்கள்
துயர்நீக்க முனைந்தவருக் கிதுகைம் மாறோ?
நற்றாயை இழந்தவரைப் போன்றோம்! நாட்டை
நலிவுறுத்தும் மதவெறியின் கொடுமை காணீர்!
1


‘உலகத்தில் அரசியலில் நிலவும் சின்ன
ஒவ்வாத செய்கையினைக் கூர்ந்து நோக்கிக்
கலங்காமல் இடித்துரைத்தான்! யாரே?’ என்னில்,
‘காந்தி’யென உடனுரைக்கும் சிறிய பிள்ளை!
விலங்காக மதித்துவிட்டான் கோழை கோட்சே!
வெறியனால் உலகின்முன் பழிசு மந்தோம்!
கலங்கரையின் விளக்கவியத் தத்த ளிக்கும்
கலம்வாழ்நர் போல்நாடு கலங்கு தந்தோ!
2


கட்குடியைப் போக்குதற்கும், பிறராற் போட்ட
கால்விலங்கை நீக்குதற்கும் சிறையும் சென்று,
முட்பாட்டை வழியொழித்து மக்கட் காக
முழுநாளைச் செலவழித்த சுடரை, அந்தோ!
எக்காலம் இனிக்காண்போம்? இதுகைம் மாறோ?
இருளுலகிற் கினியாரே விளக்கம் சேர்ப்பார்?
கட்டாகத் தமிழ்நாட்டீர்! முனைந்தெ ழுந்தே

காந்திவழிக் குறைமுடிப்பீர்! மடமை மாயும்!
3

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/68&oldid=1180004" இலிருந்து மீள்விக்கப்பட்டது