பக்கம்:இரவு வரவில்லை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. கொடுந் துயரம் அந்தோ!


சிற்றூரில் நானிருந்தேன்; வயல்வெளியைச் சுற்றித்
திரிந்துவரும் போழ்தினிலே, எதிர்வீட்டுப் பையன்
பெற்றாளை இழந்தான்போல் அழுதோடி வந்தான்;
‘பேசெ’ன்றேன்; ‘கலைவாணர் என்எஸ்கே இன்று
செத்தாராம்!’ எனச்சொன்னன்! மரமானேன்; வீசும்
செழுந்தென்றல் வயல்வெளியும் தீச்சுடரே கண்டேன்!
பற்றியதே பெருந்தீயும்! கலையென்ன ஆகும்?
பழமைக்கு வேட்டினிமேல் யார்வைக்கப் போறார்?
1


இடித்தூக்கிச் சிரிப்பூட்டி இழிந்தநிலை கண்முன்
இழுத்துவந்து சிந்திக்க எவர்தூண்டப் போறார்?
கொடுத்துதவ யாருண்டு? தமிழ்நாட்டில் ஏழை
குறைநீக்கிக் காப்பாற்ற யாராலே யாகும்?
படிக்காத நம்நாட்டார் பிறநாட்டார்க் கென்றும்
பகுத்தறிவைச் சிரிப்பாலே தூண்டிவிட்ட அந்த
நொடிப்பெல்லாம் விழியிரண்டும் மறந்திருக்கப்போமோ?
நூறாறு விண்ணிடிகள் தலையில்விழக் கண்டோம்!
2


மண்ணழுமே! வாயெழுந்து மனங்குளிரச் செய்யும்
மறத்தமிழர் தொன்றுதொட்டு வளர்த்துவந்த தீஞ்சொற்
பண்ணழுமே! நொடிப்பழுமே! கலையழுமே! வீரப்
பைந்தமிழர் குடியழுமே! கலங்காத என்றன்
கண்ணழுமே! தமிழ்நாட்டிற் கலைவாணர் போலச்
சிரிப்பாலே கருத்துாட்ட யார்பிறக்கப் போறார் ?
பெண்ணழுமே! ஆணழுமே! கிழமழுமே! மாறாப்

பேரிழப்பாம் உலகிற்கே கொடுந்துயரம் அந்தோ!
3

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/70&oldid=1180122" இலிருந்து மீள்விக்கப்பட்டது