பக்கம்:இரவு வரவில்லை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. யாம் மறக்கப் போமோ?


பிறைநிலவில் செம்புள்ளி போலிருக்கும் நெற்றிப்
பெரும்பொட்டுக் குங்குமமும், ஆன்றுயர்ந்த இன்சொல்
நிறைநிலவு வாய்ச்சிரிப்பும், சிரிக்கின்ற கண்ணும்,
நெடுந்தோளும், உடற்கட்டும், நிலைகுலையா நெஞ்சும்,
குறைநிலவும் பெண்ணினத்தின் முன்னேற்றத் தொண்டும்
கொண்டதுவே தருமாம்பாள் சீர்உருவம்! வாழ்வை
மறைத்ததுவாம் கொடுஞ்சாவு! மக்கட்கோர் ஈட்டி!
மாற்றில்லாப் பேரிழப்பே! யாம்மறக்கப் போமோ?
1


மூதறிஞர் தமிழ்ப்புலவர் மயிலைசிவ முத்தின்
முகக்குறிப்பை நன்குணர்ந்து தமிழ்நாட்டை வாட்டும்
தீதெல்லாம் மாய்ப்பதற்குத் தருமாம்பாள் அன்னாய்!
சிட்டைப்போல் செயல்புரிந்தீர்! செந்தமிழைக் காத்தீர்!
ஓதுகலை மாணவரும் மங்கையரும் ஏங்க
உயிர்நீத்துப் போனீரே! யாம்மறக்கப் போமோ?
காதுக்கோ கொதிஈயம்! கண்ணுக்கோ கொள்ளி!
கற்றோரை, முத்தைஇனி யார்தேற்றப் போறார்?
2


நோய்நாடி, நோய்முதலாம் வகைநாடி, நாட்டில்
நுண்ணறிவின் துணைநாடித், தமிழ்நாடு தந்த
தாய்நாடித், தாய்மாரின் படைநாடி மாற்றாந்
தாய்இந்தி புறங்கண்ட தருமாம்பாள் அன்னாய்!
சேய்நாடிச் செந்தமிழை வளர்க்கின்ற சென்னை
மாணவர்கள் மன்றத்தில் தித்திக்கப் பேசும்
வாய்நாடி யாரினிமேல் உரைகேட்கப் போறார்?

மலர்முகத்து மாமணியே! யாம்மறக்கப் போமோ?
3

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/71&oldid=1180077" இலிருந்து மீள்விக்கப்பட்டது