பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

இராக்கெட்டுகள்


தங்கி விடும்; 400 மைல் உயரத்திலும் மிகச் சிறிய அளவுகள் வளி மண்டலம் இருப்பதால், அவை துணைக்கோள்களின் வேகத்தைப் படிப்படியாகத் தணிப்பதற்குப் போது மானது. வேகம் தணியத் தணியப் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் இழுப்பு அவற்றின் உயரத்தையும் இழக்கச் செய்கின்றது. நாளடைவில் அவை படிப்படியாகப் பூமிக்கு அண்மையில் வந்து, இறுதியாக வளி மண்டலத்தில் எரிந்தே போகின்றன.

துணைக்கோள்களை மிகச் சரியான வட்டப் பாதையில் செல்லும்படி செலுத்துவதே முதல் தடையாக இருந்தது. எடுத்துக்காட்டாக, ஸ்புட்னிக்-1இன் உயரம் மிகத் தொலைவான உயரத்தில் (apogee) பூமிக்குமேல் 588 மைலும், அதன் மிக அண்மையான உயரத்தில் (perigee)142 மைலும் தான் இருந்தது. இதனால் ஒவ்வொரு சுற்றிலும் அஃது இறுதியான குறைந்த அளவு காற்று உள்ள வளி மண்டலத்திற்கு வந்து மூன்று மாதகாலமே தங்கும் வாய்ப்பு நேரிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் அமெரிக்கர்களால் அனுப்பப் பெற்ற வரன்கார்டு-1 (Vanguard-I)[1] என்ற துணைக்கோள் ஒரு நீள்வட்ட அயனப்பாதையில் நுழைந்தது. பூமியினின்றும் மிகத் தொலைவான இடத்தில் பூமி மட்டத்திற்குமேல் அதன் உயரம் 2,453 மைலும், அதன் மிக அண்மையான தூரத்தில் அதன் உயரம் 409 மைலும் இருந்தன. மிக அண்மையான தூரத்திலுள்ள அதன் உயரமே கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பெறாத மிகக் குறைந்த அளவில் அதன் வேகம் தணிந்து கொண்டிருப்பதால், அது கிட்டத் தட்ட ஆயிரம் ஆண்டுகள் விண்வெளியில் தங்கும் என்று எதிர்பார்க்கப்பெறுகின்றது.


  1. 1953 மார்ச்சு 17இல் அனுப்பப்பெற்றது.