பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜன் எளிய வாசிப்பு வழி வரிசை

இவ்வாசக வரிசை சிறுவர், சிறுமியர் அகமகிழ்ந்து வாசித்துப் படிப்படியாக வாசிப்பில் திறமை பெறுவதற்குத் தகுந்த படித்தர முறையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வரிசையில் அமைந்துள்ள கதைகள் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிவன. கதைகளுட் சில பழையனவாயினும், புதிய முறையில் சிறுவர், சிறுமியர்க்கு மேலும், மேலும் வாசிக்க வேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்கும் வகையில், வாசிக்கும் மாணவர்களின் வகுப்புத் தரத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளன.

வாசிக்கும் கதைகளின் கூறுபாடுகள் சிறுவர், சிறுமியர் மனத்திற் பசுமரத்து ஆணி போல இனிது பதியத் தகுந்த வகையில் விளக்கச் சித்திரங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய கதைகளை வெளியிடுவதில் வேண்டுந் திருத்தங்களைச் செய்து உதவிய வித்துவான் மே. வீ. வேணு கோபாலப் பிள்ளையவர்களுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையோம்.

கல்வித் துறையில் ஈடுபட்டுத் தமிழ் நாட்டுத் தனிப் பெருஞ்செல்வங்களாகிய சிறுவர், சிறுமியர் கல்வி முன்னேற்றத்திற் கண்ணுங்கருத்துமாய் உழைத்து வரும் அன்பர்கள், இவ்வாசக வரிசையைப் பலர்க்கும் பயன்படச் செய்து, எம்மை ஊக்கியருள வேண்டுகிறோம்.

சென்னை,
1-5-1948

பிரசுர கர்த்தர்கள்