பின்னர், அழகிய உருவத்தோடு வெளியில் வந்தனர். அவர்களைக் கண்டார் புண்டரீகர்; ‘பெண்களே, கோரமான உருவத்துடன் உள்ளே சென்ற நீங்கள், அழகிய உருவம் பெற்று வருகிறீர்களே! அவ்வுருவத்தை எப்படிப் பெற்றீர்கள்?’ என்று அவர்களை வினவினார்.
அவர்களுள் ஒருத்தி அவரை நோக்கி, ‘அடா பாவி, நல்லவர்கள் வெறுக்கத்தக்க கொடியவன் நீ; பெற்றோர்களைக் காப்பாற்றாத சண்டாளன். எங்கள் முன் நீ வருதல் தகுமோ?’ என்று கோபித்துக் கொண்டாள்.
புண்டரீகர் பயந்து விட்டார். அவர் தாம் செய்த கெட்ட காரியங்களை நினைத்து வருந்தினார்; பின்பு அப்பெண்ணின் பாதங்களில் வீழ்ந்து, தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவள், அவரை ஆசீர்வதித்து, ‘நானும், மற்றைப் பெண்களும் புண்ணிய நதிகளின் வடிவாயிருக்கும் தெய்வ மாதர்கள். நீராடிச் செல்லும் மக்களின் பாவங்கள் எங்களைச் சேர்கின்றன. அதனால், நாங்கள் கோரமான ரூபத்தை அடைகிறோம். நாங்கள் இவருக்குப் பணி செய்வதால், எங்கள் பாவங்கள் நீங்குகின்றன. அதனால், நாங்கள் தினந்தோறும் அழகிய உருவமும் பெறுகிறோம்,' என்றாள்.
7