பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

104

மறுநாள் அதிகாலையில் விடிவதற்கு இன்னும் நாலைந்து நாழிகைகள் இருக்கும்போது இருள் பிரியாத வைகறையில் ரங்ககிருஷ்ணனுக்கு மீண்டும் நினைவு வந்தது. அப்போது ராணி மங்கம்மாள் அருகிலிருந்தாள்.

அறையில் இருந்த திவ்யப் பிரபந்த ஏடுகளைச் சுட்டிக் காட்டி யாராவது சுவாமிகளை வரவழைத்துப் பிரபந்தம் சேவிக்கச் சொல்லுமாறு தாய்க்கு ஜாடை காட்டினான் அவன்.

உடனே திருவரங்கத்திற்குப் பல்லக்கை அனுப்பிப் பரம வைஷ்ணவரான ஒரு வைதீகரை அழைத்து வரச் செய்தாள் மங்கம்மாள். பன்னிரண்டு திருமண்காப்பும் ஒளி திகழும் முக மண்டலமுமாகச் சாட்சாத் பெரியாழ்வாரே நேரில் எழுந்தருளியது போல ஒரு பரம வைஷ்ணவர் அங்கே எழுந்தருளினார். பிரபந்தம் சேவித்தார்.

துளங்கு நீள்மூடி அரசர்தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவர்க்கு
உளம்கொள் அன்பினோடு இன்னருள் சுரந்தங்
கோடு நாழிகை ஏழுடன் இருப்ப

விளங்கொள் மற்று அவற்கு அருளிச்செய்த
வாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து,
உய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

கணீரென்ற குரலில் பாடல் ஒலித்தது. அந்தத் திவ்ய சப்தம் செவிகளில் ரீங்காரமிட்டு தெய்விகமாக முரலும்போது ரங்க கிருஷ்ணன் உலகம் அளந்தவனின் பொன்னடியைச் சென்று சேர்ந்திருந்தான்.

வைகறைப்புள்ளினம் ஆர்ப்பரிக்க, காவிரி நீர் சலசலக்க, பூபாளராக ஒலிகள் பூரிக்க, இளங்குளிர்க் காற்று எழில் வீச உலகில் பொழுது புலர்ந்து கொண்டிருந்தபோது திரிசிரபுரம் அரண்மனையில் அதே பொழுது அஸ்தமித்துவிட்டது. அரண்மனை அழுகுரல்களில்