பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ராணி மங்கம்மாள்

வேண்டியதில்லை. என்னைத் தீயில் தள்ளிக் கொன்றுவிடுங்கள் அல்லது கொன்று கொள்ள உதவுங்கள்."

"என்னைப் போன்றவர்கள் வாழ்வதற்கு உதவுவது தான் வழக்கம் முத்தம்மா! சாவதற்கு உதவி செய்து எனக்குப் பழக்கமில்லை."

"எது உபகாரம் எது உபகாரமில்லை என்பதை அதைப் பெறுகிறவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் மகாராணி இந்த நிலைமையில் என்னை வாழவிடுவது எனக்கு உதவியா, சாகவிடுவது உதவியா என்பதை உங்களைவிட அதிகமாக நான்தான் உணரமுடியும். வாழ்ந்து கொண்டே அணு அணுவாகச் சாவதைவிட, ஒரேயடியாகச் செத்துவிடுவது எவ்வளவோ மேல்."

"நீ சித்தப்பிரமை பிடித்து ஏதேதோ அர்த்தமில்லாமல் உளறுகிறாய் முத்தம்மா இந்த மனப் போக்கை வளர விடாதே இது உனக்கும், உன் குழந்தைக்கும் நல்லதில்லை......"

என்று கூறி அவளைச் சமாதானப்படுத்திவிட்டுப் பணிப் பெண்களைத் தனியே அழைத்து ஒரு விநாடிகூடத் தாயையும் குழந்தையையும் தனியே விட்டுவிடாமல் அருகேயே இருந்து கண்காணித்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு மீண்டும் கடுமையான உத்தரவு போட்டாள் ராணி மங்கம்மாள்.

அன்று பிற்பகலில் ஏதோ கைத் தவறுதலாகச் சின்னமுத்தம்மாள் தன் அறையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பன்னீரை ஒரு குவளையில் எடுத்துக் குடிக்க முயன்றபோது அருகே இருந்த தாதிப்பெண்,

"அம்மா! அம்மா! அது பன்னீர்...பிரசவித்த வயிற்றோடு பன்னீரைக் குடித்தால் உடனே ஜன்னிகண்டுவிடும்!" என்று எச்சரித்து விட்டு உடனே பன்னீரை வாங்கி அதில் திரும்ப ஊற்றினாள். பணிப்பெண் இதைச்செய்தபோது சின்ன முத்தம்மாள் அடம் பிடிக்கவில்லை. தன்னைத் தடுத்த பணிப்பெண்ணின் முகத்தைக்