பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ராணி மங்கம்மாள்

சூழச் செய்த பின் சின்ன முத்தம்மாள் தன்னருகே பிஞ்சுக் கை கால்களை உதைத்துக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துப் பால் கொடுத்தாள். உச்சி மோந்தாள். மாறி மாறி முத்தமிட்டாள்.

அவள் கண்களில் ஈரம் பளபளத்தது. ஓசைப் பட்டுவிடாமல் மெளனமாக அழுது கண்ணீர் சிந்தியபடி மங்கலான தீப ஒளியில் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பருகி விடுவதுபோல் பார்த்தாள். மறுபடி வெறி பிடித்தது போல் மாறி மாறி முத்தமிட்டுக் கொஞ்சினாள்.

பின்பு தன் கட்டிலுக்கு அருகேயிருந்த மற்றொரு சிறு கட்டிலில் பட்டுத்துணியை விரித்துக் குழந்தையைக் கிடத்தினாள். அதன் அழகை இரசித்து விட்டுத் தன் கைகளாலேயே அதற்குத் திருஷ்டியும் கழித்தாள். திருவரங்கன் இருந்த திசை நோக்கித் தியானித்துக் கைகளைக் கூப்பினாள்.

"தெய்வமே இந்தப்பச்சிளம் குருத்து வளர்ந்து வாழத் துணையாக இரு."

என்று மனத்தில் நினைத்தாள்.

அதன்பின் ஏதோ திடமான ஒரு முடிவுக்கு வந்துவிட்ட முகபாவத்துடன் பன்னீர் அண்டாவின் அருகே சென்றாள். வெறிபிடித்தவள் போல் குவளை குவளையாகப் பன்னீரை வாரிப் பருகினாள். எத்தனை குவளைகள் என்று எண்ண முடியாதபடி பன்னீர் உள்ளே போயிற்று. விறுவிறுவென்று உடம்பில் குளிர்ச்சி ஏறிற்று.

இனி உள்ளே இடமில்லை என்று கூறும் அளவு பன்னீரைப் பருகி முடித்ததும் தள்ளாடித் தள்ளாடி நடந்து குழந்தையின் கட்டிலருகே சென்று மறுபடி அதைப் பார்த்தாள். கடைசி முறையாக அந்த உயிருள்ள பச்சை மண்ணை முத்தமிட்டு உச்சி மோந்தாள். கண்கலங்கி அப்படியே நின்றாள்.