பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. இடமாற்ற எண்ணம்

ப்போது சின்னமுத்தம்மாளின் இதயத்தில் தாய்ப் பாசத்துக்கும் விரக்திக்கும் இடையே ஒரு போராட்டம் மூண்டது. துணிவதும், தயங்குவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து முடிவெடுத்திருந்தாலும் மறுபடியும் பாசமும், பிரியமும், அஞ்ஞானமும் குழம்பின. சிரமப்பட்டு வலிந்து முயன்று இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் அவள்.

மறுபடியும் திரும்பி வந்து தன் கட்டிலில் படுத்தாள். சில விநாடிகளில் விழித்துக் கொண்ட பணிப்பெண் ஒருத்தி, "அம்மா! ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டபோது "ஒன்றும் வேண்டாம் நன்றாகத் தூங்க வேண்டும். தூங்கப் போகிறேன்" என்றாள் சின்ன முத்தம்மாள், பணிப்பெண் இந்த வார்த்தைகளில் எந்த வேறுபாடான அர்த்தத்தையும் காணவில்லை. சகஜமாக ஏற்று சகஜமாகவே புரிந்துகொண்டாள்.

பொழுது விடிந்தது. அரண்மனையில் ஒரே பரபரப்பு. சின்ன முத்தம்மாளுக்குப் பயங்கரமாக ஜன்னி கண்டிருந்தது. மரணத்தின் பிடியிலிருந்து அவளை மீட்க வைத்தியர்கள் போட்டி போட்டுக் கொண்டு முயன்றனர். பலிக்கவில்லை. ஜன்னி வேகத்தினைத் தாங்க முடியாமல் உயிர்நீத்தாள் சின்னமுத்தம்மாள்!

ராணி மங்கம்மாள் பேரக் குழந்தையை அப்போது கையிலெடுத்தாள் மறுபடி அக்குழந்தையை அதன் தாயிடம் விடமுடியாமல் தானே வளர்க்க வேண்டியதாயிற்று. தாயாகவும், பாட்டியாகவும் இருந்து அக்குழந்தையை வளர்த்தாக வேண்டிய பொறுப்பு அவளிடம் வந்தது.

மறுபடியும் அந்த அரண்மனையில் தற்காலிகமானதோர் இருள் சூழ்ந்தது. இரண்டு பெரிய துக்க சம்பவங்கள் நேர்ந்து விட்ட திரிசிரபுரம் அரண்மனையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்