பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

127

தன்னைத் தவிர்த்துக் கொண்டு ராஜதந்திர முறைகளாலும், சாதுரியங்கள் சாகஸங்களாலும் ஆள்வதில் கூட ராணி மங்கம்மாளுக்கு இப்படிச் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்தன. பெண் ஆளும் நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆளுவது சுலபம் என்று அக்கம்பக்கத்து அரசர்கள் துணிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி அவர்களை மிரட்டிவைக்க வேண்டியிருந்தது.

மிகவும் தொலைதூரத்தில் இருந்தாலும், அடிக்கடி தெற்கே படைகளை அனுப்புவதிலுள்ள சிரமங்களாலும் டில்லி பாதுஷாவின் உதவிகள் கிடைப்பதிலும் சில இடையூறுகள் விளைந்தன.

திரிசிரபுரத்தின் எல்லைப் பகுதியில் சில சிற்றூர்களை உடையார்பாளையம் சிற்றரசன் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவனிடமிருந்து அந்த ஊர்களை மீட்பதற்காகப் பாதுஷாவின் படைத் தளபதி டாட்கானுக்கு நிறையப் பொருள் கொடுத்து முயன்றாள் அவள். அவ்வளவு பொருள் உதவி செய்தும் டாட்கானே நேரில் வரமுடியவில்லை. மங்கம்மாள் இழந்த பகுதிகளை மீட்பதற்குப் படைவீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தான் அவன்.

ரங்ககிருஷ்ணனின் மகன் விஜயரங்க சொக்கநாதன் குழந்தையாயிருந்தாலும் அவனுக்கே முறையாக முடிசூட்டிவிட விரும்பினாள் அவள். அந்தக் குழந்தைக்கு முடிசூட்டி ஆட்சியுரிமையை அளித்துவிட்டு, அவனுடைய பிரதிநிதியாக இருந்து தான் ஆட்சிக் காரியங்களை நடத்தலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது.

"தாய் தந்தையை இழந்து பாட்டியின் ஆதரவில் வளரும் சிறுவனை எதிர்த்துப் போர் புரிவது அப்படி ஒன்றும் வீரதீரப் பிரதாபத்துக்குரிய செயல் இல்லை" என்ற எண்ணத்தில் எதிரிகள் குறைவாகவே தொல்லை கொடுப்பார்கள் என்பது அவளது கணிப்பாயிருந்தது.

தன்னையும் தன் நாட்டையும் அதன் எதிர்கால வாரிசான குழந்தை விஜயரங்க சொக்கநாதனையும் சுற்றிப் பிறருடைய இரக்கமும் அநுதாப உணர்வுமே சூழ்ந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள்.