பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

131

மனத்தோடு அந்தக் கனவை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.

மாரிக் காலத்திற்குப் பின் ஒரு நல்ல மாலை வேளை. வண்டியூர்த் தெப்பக்குளம் கரைகள் வழிய நிரம்பியிருக்கிறது. அலைகளைக் காற்றுத் தழுவி அசைத்துப் படிக்கட்டுகளில் மோதவிட்டு விளையாடுகிறது. தரையில் கிடத்திய பெரும் கண்ணாடிப் பாளம்போலக் குளம் மின்னுகிறது.

வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபமும் தோட்டமும் பச்சைப் பசேலென்று மழைக் காலத்தின் முடிவிற் காட்டும் செழிப்பைக் காண்பிக்கின்றன. பறவைகள் கூட்டையும் நேரமாகையினால் மைய மண்டபத்தில் ஒரே குரல்கள் மயமாகப் பறவை வகைளின் சப்தங்கள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன.

கரையிலிருந்து ஓர் அலங்காரப் படகில் ராணி மங்கம்மாள், இளைஞனான விஜயரங்க சொக்கநாதன், அலர்மேலம்மா, வேறு சில பணிப்பெண்கள் ஆகியோர் ஓர் உல்லாசப்பயணமாக மைய மண்டபத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். போது மிகவும் மனோரம்மியமாயிருந்தது.

அன்று அரச குடும்பத்தினர் காற்று வாங்கவும் பொழுதைச் சுகமாகக் கழிக்கவும், வந்திருப்பதையறிந்து படகோட்டியும் படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.

நீரில் துள்ளும் வெள்ளிநிற மீன்களைக் கண்டு திடீரென்று இருந்தாற்போலிருந்து,

"பாட்டீ! இந்த மீன்களைத் தண்ணீரிலிருந்து கரையிலெடுத்து எறிந்தால், சிறிது நேரத்தில் துள்ளித் துடித்துச் செத்துப் போய்விடும் இல்லையா?"

என்று குரூரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் விஜயரங்கன்.

அவன் கேள்வி அசட்டுத்தனமாகவும்,அபத்தமாகவும் தோன்றியது அவளுக்கு.

"இந்தச் சுகமான மாலை வேளையில் யாரையாவது வாழ வைப்பதைப் பற்றிப் பேசு விஜயரங்கா! கொல்வதையும் துடித்துச்