பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

133

"வாதத்துக்கு மருந்துண்டு! பிடிவாதத்துக்கு மருந்து இல்லை. உன் இஷ்டப்படி செய் பத்திரமாக ஏறிப் போய்ப் பார்த்து விட்டு விரைவில் இறங்கி வந்துவிடு."

"என்னோடு நீயும் வரவேண்டும் பாட்டி நாம் இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்."

"நானா? என்னால் எப்படி முடியும்? இந்த வயதான காலத்தில் இத்தனை பெரிய கோபுரத்தில் நான் எப்படியப்பா ஏற முடியும்?"

"வந்துதானாக வேண்டும். பேரன் மேல் பிரியமிருந்தால் வா. வராவிட்டால் பிரியமில்லை என்று அர்த்தம். அருமைப் பேரன் என்று நீ சொல்வதெல்லாம் பொய்யா பாட்டி?"

ராணி மங்கம்மாள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பேரனின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்க முடியாமல் கோபுரத்தில் ஏற இசைந்தாள் அவள்.


17. கெட்ட சொப்பனமும் குழப்பமும்

பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது.

பாதிக்கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே இங்கிருந்து ஒருவரைக் கீழே தள்ளினால் உயிர் பிழைக்க முடியுமா பாட்டி?" என்று முன்போலவே சிரித்தபடி கேட்டான் பேரன்.

ராணி மங்கம்மாள் மூச்சு இறைக்க நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டபடி அவனுக்குப் புத்திமதி சொன்னாள்.