பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ராணி மங்கம்மாள்

"மேலே போகப்போக எண்ணங்கள் உயர்ந்தனவாக அமைய வேண்டும் அப்பா மேலேயிருந்து யாரைக் கீழே தள்ளிவிடலாம் என்று நினைப்பதைவிடக் கீழே இருக்கிற யாரை மேலே அழைத்து உயர்த்திக் கொள்ளலாம் என்று நினைக்கப் பழகவேண்டும்."

"அப்படிப் பழகலாம் பாட்டி! ஆனால் கீழேயிருக்கிற ஒருவரை மேலே வரவழைக்க நேரமும் சிரமமும் அதிகம். மேலே இருக்கிற ஒருவரைக் கீழே தள்ளிவிட அரைநொடி கூடப் போதுமானது."

"அற்பர்களுக்குத்தான் அப்படித் தோன்றும் விஜயரங்கா நீ அற்பனாகிவிடக்கூடாது. பெருந்தன்மையானவனாக வளர்ந்து உருவாக வேண்டும். பெருந்தன்மை உள்ளவன் கீழே இருந்து சிரமப்படுகிறவனை மேலே கொண்டு வருவதற்கு முயலுவானேயன்றி, மேலேயிருப்பவனைக் கீழே தள்ளிவிட்டு மகிழ ஒருபோதும் முயலமாட்டான்."

"பாட்டி எனக்குப் பெருந்தன்மை கிடையாது. வேண்டவும் வேண்டாம்."

"அவன் இதைச் சொல்லும்போது அவர்கள் கோபுரத்தின் உச்சிக்கு வந்திருந்தார்கள். மேலே நீலவானின் விதானத்தில் பிறைநிலவு தெரிந்தது. நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியது. மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது.

குபீரென்று அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளிவிட முயன்றான் விஜயரங்கன்.

"விளையாடாதே விஜயரங்கா விளையாட்டு வினையாகி விடும்."

"இது விளையாட்டு இல்லை பாட்டி உங்களை இங்கே அழைத்து வந்ததே இதற்குத்தான்."

என்று சொல்லியபடியே பலங்கொண்ட மட்டும் முயன்று. மறுபடி அவளைக் கீழே தள்ள முயன்றான் விஜயரங்கன்.