பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ராணி மங்கம்மாள்

“என்ன விஷயம்? நீங்கள் எல்லோரும் இத்தனை அவசரமாகப் புறப்பட்டு வந்திருப்பதிலிருந்து ஏதோ அவசரமான காரியம் என்று நான் அநுமானித்துக் கொண்டது சரியாக இருக்குமா?”

“உங்கள் அநுமானம் முற்றிலும் சரிதான் மகாராணீ! டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் படை வீரர்களும், செருப்பு ஊர்வலமும் திண்டுக்கல்லைக் கடந்து வேகமாக மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கவே நாங்கள் விரைந்து வந்தோம்”.

“இது படையெடுப்பா? அல்லது பயமுறுத்தலா?”

“இரண்டும்தான் மகாராணீ!”

“அது சரி; என்னவோ செருப்பு ஊர்வலம் என்கிறீர்களே...? அது என்ன கூத்து?”

“வருஷா வருஷம் தென்னாட்டு அரசர்களிடமும், சிற்றரசர்களிடமும் கப்பமும், வரியும் வாங்குவதற்குப் பாதுஷாவின் படைவீரர்கள் புறப்பட்டு வருவதுண்டல்லவா? இந்த வருஷம் ஒரு புது ஏற்பாடாக ஒளரங்கசீப்பின் கால் செருப்பு ஒன்றை யானை மேல் அலங்கார அம்பாரியில் ஜோடித்து வைத்து அனுப்பியிருக்கிறாரகள். கப்பம் கட்டுகிற நாட்டு அரசர்களும், மக்களும் அந்தச் செருப்பை வணங்கி வழிபட வேண்டுமாம்”.

“வணங்கி வழிபட மறுத்தால்?”

“அப்படி மறுப்பவர்களோடு அவர்கள் போர் தொடுப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்; அந்த பயமுறுத்தலுக்கு நடுங்கி எல்லா இடங்களிலும் அந்தப் பழைய செருப்புக்கு வணக்கமும், வழிபாடும் நடக்கிறது மகாராணீ!”

“இது, அக்கிரமம்... அநியாயம்...”

“அதிகாரத் திமிரில் இருப்பவர்கள் தங்கள் அக்கிரங்களையும், அநியாயங்களையும் கூடச் சட்ட ரீதியானவை என்று பிரகடனம் செய்து விட முடிகிறது அம்மா! அதை மீறினால் தண்டனை என்று அறிவித்து விடவும் முடிகிறது. அறியாது மக்கள் செய்யும்