பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

139

கவிழ்த்துவிடாமல் இருந்தாலே பெரிய காரியம்" என்று விளையாட்டாகப் பதில் பேசினாள் அலர்மேலம்மாள். அதைக் கேட்ட மங்கம்மாளுக்குத் துணுக்கென்றது. அலர்மேலம்மாள் இயல்பான நகைச்சுவையோடு பேசியிருந்தாலும் அதில் தீய நிமித்தம் இருப்பதுபோல் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. சில விநாடிகள் அப்படியே பிரமை பிடித்ததுபோல் பேசாமலிருந்து விட்டாள் அவள். மற்றவர்கள் ஏதோ கேட்பதற்குப் பதில்கூட அவளால் சொல்ல முடியவில்லை. மைய மண்டபக் கரைக்காக இறங்கவேண்டிய படிக்கட்டு வந்ததும் படகு நின்றது. அப்படிநின்று சிறிது நேரமான பின்னரும்கூட அவளுக்கு மற்றவர்கள் நினைவூட்டிய பின்தான் கரையை அடைந்திருப்பது கவனத்தில் பதிந்தது.

படகிலிருந்து இறங்கி மைய மண்டபத் தீவில் கால் வைப்பதற்கே பதறியது ராணி மங்கம்மாளுக்கு. "குழந்தையைக் கீழேயே வைத்துக் கொண்டிருந்து சுற்றிக் காட்டு! போதும்... மைய மண்டபக் கோபுரத்துக்கெல்லாம் கொண்டு போக வேண்டாம்" என்று மங்கம்மாள் அலர்மேலம்மாளை எச்சரித்து வைத்தாள்.

என்ன காரணத்தால் ராணி அன்று அவ்வளவு அதிக எச்சரிக்கை எடுத்துக் கொள்கிறாள் என்பதை அறிய முடியாமல் அலர்மேலம்மாளும், மற்றவர்களும் வியப்படைந்தார்கள்.

வழக்கமாக அந்தத் தெப்பக் குளத்திற்கு வரும்போதெல்லாம் மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை ஏறி, மதுரை நகரையும் கோயில்களையும் கோபுரங்களையும் ஒரு சேரக் காண முடிந்த வாய்ப்பையும் வசதியையும் இழக்காத ராணி இம்முறை ஏன் கோபுரத்தில் கண்டிப்பாக ஏறக்கூடாது என்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியாத மர்மமாகவே இருந்தது.

பொழுது சாய்ந்து இருட்டுகிற வரை அவர்கள் தெப்பக் குளத்தின் மைய மண்டபத்திலேயே இருந்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள். அந்த அழகிய நீராழி மண்டபத்திற்கு வருவதற்கும், அது அமைந்த தீவிலிருந்து சுகமான மாலைக் காற்றை