பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. சேதுபதியின் சந்திப்பு

துரைப் பெரு நாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள். எதிர்பாராத அபாயமாக இது நேர்ந்திருந்தது.

அப்போது மைசூர் அரசன் சிக்க தேவராயனின் படைத் தலைவர்களில் மிகவும் சாமர்த்தியசாலியான குமரய்யாவின் தலைமையில் இந்தப் படையெடுப்பு நடந்திருக்கிறது.

வடக்கே மைசூரிலிருந்து வழி நெடுகிலும் உள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு படையெடுப்பு நடந்ததன் காரணமாக மிகவும் இரகசியமாகவே எல்லாக் காரியங்களும் முடிந்திருந்தன.

குமரய்யாவுக்கு, அவனது படைகளும் திரிசிரபுரம் வந்து கோட்டையை வளைத்துக் கொண்டு முற்றுகையிடுகிறவரை அந்தப் படையெடுப்புத் தகவல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இராயசமும் மற்றவர்களும் அந்தத் தகவலைத் தன்னிடம் வந்து கூறியபோது ராணி மங்கம்மாளுக்கு ஓரிரு கணங்கள் அதிர்ச்சியாகத் தானிருந்தது. மங்கம்மாள் அவர்களை வினவினாள்:

"இப்படிப் பல காத தூரம் படை நடத்தி வந்து குமரய்யாவும் அவன் படைவீரர்களும் திரிசிரபுரத்தைப் பிடிக்கிறவரை நம் ஒற்றர்களும் ராஜ தந்திரிகளும் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்?"

"வழி நெடுகிலும் உள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு குமரய்யாவும் அவனுடைய ஆட்களும் திவ்ய தேசயாத்திரை செல்லும் தேசாந்திரிகளைப் போல முன்னேறி வந்து விட்டார்கள்.