பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

ராணி மங்கம்மாள்

"சொல்கிறேன். முன்னோர்களின் காலத்திலேயே திருவாங்கூர் மன்னன் வேண்டாவெறுப்பாக நமக்குத் திறை செலுத்தி வந்தான் இப்போது அதுவும் நின்று போயிற்று. இங்கு இன்று நிலவுகின்ற வலிமையற்ற அரசியல் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமானதாகத் கருதிக்கொண்டு நமக்குச் செலுத்திக்கொண்டிருந்த திறைப் பணத்தை நிறுத்தி விட்டான். அவனைத் தட்டிக்கேட்க இப்போது நேரம் வந்து விட்டது. ஒரு பெண் ஆள்வதால் மதுரைச் சீமையை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நினைப்பைப் பொறுத்துக் கொள்வதற்கில்லை. திருவாங்கூர்மேல் படையெடுத்தாவது திறை வாங்கியாக வேண்டும்."

"அருமையான யோசனை. ரவிவர்மன்மேல் படையெடுத்துச் சென்று அவனுக்குப் பாடம் புகட்டுவதன் மூலம் நம்மை வலிமை குறைந்தவர்களாக நினைக்கும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்தது போலிருக்கும் இந்தப் படையெடுப்பு யோசனை சமயோசிதமானது."

"சமயோசிதமானது மட்டும் இல்லை. இராஜதந்திரம் நிறைந்தது. இதைப் பார்த்த பின்பாவது மைசூரை ஆளும் சிக்கதேவராயனுக்குத் திரிசிரபுரம் கோட்டையைப் பிடிக்கும் பேராசை தோன்றாமல் இருக்கட்டும். நம்மைக் குறைத்து மதிப்பிடுகிறவர்களுக்கு நாம் யாரென்பது புரியிட்டும்."

ராணி மங்கம்மாளின் கட்டளைப்படியே திரிசிரபுரத்திலிருந்து திரும்பிய படைகள் நேராகத் திருவாங்கூரை நோக்கித் திசை திரும்பின.

உடனே திரிசிரபுரம் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன. வீரர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று.

மதுரைப் பெருநாட்டின் ஆட்சி வலிமையும், ஆளும் திறமையும் அக்கம் பக்கத்து அரசர்களுக்கும், நாடுகளுக்கும் நன்றாகப் புரியும்படிசெய்யப்பட்டது. எல்லாப் பெருமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பின்னிரவில் கண்ட அந்தக் கெட்ட சொப்பனம் முறிந்த முள்ளாக ராணியின் மனத்திற்குள் உறுத்திக்