பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13

சில குற்றங்கள் சட்டப்படி தவறாகின்றன என்றால் இப்படி மன்னர்கள் செய்யும் சட்டங்களே தவறுகளாக இருக்கின்றன!”

“நம் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம் என்றறிந்து செல்லவே மகாராணியையும், இளவரசரையும் காண வந்தோம்.”

“அம்மா! அழகரையும், ஆலவாயண்ணலையும் வணங்கிய தலையால் அந்நிய அரசனின் அடிமைச் சின்னமாகிய செருப்பை வணங்குவதற்கு ஒருபோதும் நாம் சம்மதிக்கக் கூடாது” என்று ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அன்னையை முந்திக்கொண்டு கொதிப்படைந்து சீறினான்.

படைவீரர்கள் ராணி மங்கம்மாளின் முகத்தை உத்தரவுக்காகப் பார்த்தனர். அது பதற்றமோ, பரபரப்போ, சலனமோ அற்று நிதானமாகவும், சிந்தனை லயிப்போடும் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாகத் தேர்ந்தெடுத்து அளந்து பதறாத குரலில் மங்கம்மாள் பேசலானாள்:

“நீ சொல்வதை நான் மறுக்கவில்லை முத்து வீரப்பா! ஆனால் இதை ஆத்திரத்தோடு சமாளிப்பதைவிட மிகவும் அடக்கமாகவும் இராஜ தந்திரத்தோடும் சமாளிக்க வேண்டும். முன் கோபமும், ஆத்திரமும் அரசியல் காரியங்களில் ஒரு போதும் வெற்றியைத் தராது. நமது எதிரியைச் சந்திக்கத்தக்க விதத்தில் நம்மைப் பலப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டு தான் செயலில் இறங்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

‘பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்’

என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நினைத்துப் பார்! எதிரியைக் கண்டு உடனே வியர்க்க விறுவிறுக்க முன் கோபப்பட்டுப் பயனில்லை. கோபம் முதலில் உள்ளத்தில் எழுதல் வேண்டும். பின் சமயம் பார்த்து அது வெளிப்படவும் வேண்டும்.”

“தங்கள் உத்தரவு எப்படியோ அப்படியே நடக்கும் மகாராணீ!”