பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

151

"கப்பம் கட்டுகிறேன் என்ற வார்த்தையையே காப்பாற்றாத நீங்கள் இந்த வார்த்தையை மட்டும் காப்பாற்றுவீர்கள் என்பது என்ன உறுதி? உங்களை எப்படி நம்புவது?"

"மதுரை நாட்டுக்குக் கப்பம் கட்டுவது மட்டுமில்லை! நான் சொல்கிறபடி நீங்கள் ஒத்துழைத்தால் என்னுடைய அரசாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சரிபாதிப் பகுதியையே மதுரைப் பெருநாட்டுக்கு வழங்குவேன்."

"உங்கள் வாக்குறுதியை நான் நம்புகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான உங்கள் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? உங்கள் உதவியும் யோசனையும் இன்றி எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை நாங்கள் எப்படி ஒழிக்க முடியும்?"

"கவலை வேண்டாம் அந்தப்பாவிகளை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பின் ஒரு திட்டமே போட்டு வைத்திருக்கிறேன்."

திருவாங்கூர் மன்னன்-ரவிவர்மனின் வேண்டுகோளுக்குக் செவிசாய்ப்பதா, தவிர்ப்பதா என்று சிந்தித்துத் தயங்கினான் மதுரைப் படைத் தலைவன். வெறும் திறைப் பொருளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலே மகிழக்கூடிய ராணிக்குத் திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியையும் ஆளும் உரிமையைக் கொண்டுபோய்க் கொடுக்கிற நிலை வந்தால் தன் பெருமை உயரும் என்று படைத் தலைவனுக்கு ஆவலாகவும் இருந்தது. முயற்சி தோற்று வம்பிலே சிக்கிக் கொண்டால் ராணியிடம் தன் பெயர் கெட்டு விடுமே என்று தயக்கமாகவும் இருந்தது. தன்னுடைய பங்காளிகளை அழிப்பதற்கு எதிரியின் உதவியை வேண்டும் ரவிவர்மனின் இந்த மனப்பான்மையை வியந்தான் மதுரைப் படைத்தலைவன். அவனால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சிந்தித்துத் தயங்கினான்.

சிந்தனையின் முடிவில் ஆசைதான் வெற்றி பெற்றது. திறைப் பொருளோடு, திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியை ஆளும் உரிமையையும் பெற்றுக் கொண்டு போய் மகாராணியை