பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

ராணி மங்கம்மாள்

மதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில் கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடை மழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடிகாலையில் சென்றார்.

ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில்கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகள் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.

இப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியகாப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும், தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.

"இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமடீ! இராயசம் இப்போதுதான் அரண்மனையை விட்டுப்போகிறார்..."

கூறி முடித்துவிட்டுச் சிரித்தாள் முதல் பெண்.

"இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார்? இங்கேயே தங்கிவிடவேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூறும் வரப்போவதில்லை."