பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

161

தஞ்சை மன்னன் ஷாஜியைக் கொஞ்ச நாட்கள் அயரவிட்டு விட்டு அப்புறம் நரசப்பய்யாவை விட்டு விரட்டச்செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராணி மங்கம்மாள். தான் திடீரென்று ஆக்கிரமித்த மதுரை நாட்டுப் பகுதிகள் தனக்கே உரிமையாகி விட்டாற்போன்ற அயர்ச்சியிலும் மிதப்பிலும் ஷாஜி ஆழ்ந்திருக்க அவகாசம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை அவனே எதிர்பாராத சமயத்தில் திடீரென்று மீட்க வேண்டுமென்று மங்கம்மாள் தன் மனத்திற்குள் முடிவு செய்துகொண்டிருந்தாள். ஆனால் அந்த முடிவை யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை.

தெற்கே திருவிதாங்கூர் மன்னனை வெற்றி கொண்டு நரசப்பய்யா கோலாகலமாகத் திரிசிரபுரத்திற்குத் திரும்பி வந்தார். ராணியும் இராயசமும், அமைச்சர் பிரதானிகளும், திரிசிரபுரம் நகரமக்களும் நரசப்பய்யாவையும் படை வீரர்களையும் ஆரவாரமாக வரவேற்றனர். நரசப்பய்யா திரும்பி வந்து, ராணி மங்கம்மாள் அவரிடம் தஞ்சை மன்னன் ஷாஜியின் அடாத செயலைக்கூறிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பே ஷாஜி மங்கம்மாளின் பொறுமையையும் அடக்கத்தையும் கையாலாகாத்தனமாகப் புரிந்து கொண்டு காவிரிக்கரையைக் கடந்து திருச்சி நகருக்குள் புகுந்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

கரையோரத்து ஊர்கள் ஷாஜி படைவீரர்களால் அலைக்கழிப்புக்கு ஆளாயின. பீதியும், நடுக்கமும் பரவின. பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று.

எப்படியும் இந்தக் கொள்ளையை முதலில் தடுத்தாக வேண்டுமென்று கொள்ளிடத்தின் வடக்குக்கரை நெடுகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாசறை அமைத்துப் படைகளுடன் தங்கினார் தளபதி நரசப்பய்யா.

பாசறை அமைத்த பிறகு ஷாஜியின் கொள்ளை, கொலைகள் தொடர்ந்தன. நரித்தனமாகவும், நயவஞ்சகமாகவும் உள்ளே ஊடுருவி நுழைந்து கொள்ளையடிப்பதில் தேர்ந்த தஞ்சைக் குதிரைப்படை வீரர்கள் திரிசிரபுரம் வடபகுதியில் காவிரிக்கரை