பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

177

அதனால் அரசியல் காரியங்களில் விஜயரங்கனை அவள் சம்பந்தப்படுத்தவேயில்லை. சேதுபதி மதுரை நகரையும் சுற்றுப் புறங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு ஆளும் தகவல் தெரிந்ததும் இராயசம் முதலியவர்களோடு மந்திராலோசனை செய்தபின் தளவாய் நரசப்பய்யாவிடம்தான் அவள் மனம் திறந்து பேசினாள்.

"உங்களுக்கு இது பெரிய காரியமில்லை! இதே கிழவன் சேதுபதியை முன்பு மதுரையிலிருந்து மானாமதுரை வரை ஓடஓட விரட்டியிருக்கிறீர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையில் இந்தப் பொறுப்பை இப்போது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்."

"ஒருமுறை நம்மிடம் தோற்றிருப்பதால் சேதுபதியும் இப்போது அத்தனை அலட்சியமாக இருக்கமாட்டார். முன்னைவிட படை பலத்தைப் பெருக்கியிருப்பார்! ஆனாலும் கவலை வேண்டாம் மகாராணி மதுரையை சேதுபதியிடமிருந்து மீட்டுவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

"இந்தச் சமயத்தில் சேதுபதியை அடக்க வேண்டிய அரசியல் அவசியம் உண்டு போனால் போகிறதென்றுவிட்டு விட்டால் அவர் இதோடு நிற்கமாட்டார். நமது ஆட்சிக்கு உட்பட்ட வேறு பிரதேசங்களையும் கைப்பற்றத் துணிவார். பிறருடைய செருக்கைவிடத் தமது செருக்கு ஒருபடி அதிகம் என்று நிரூபிப்பதில் எப்போதுமே அவருக்கு ஆவல் உண்டு. இராமபிரானுக்கு உதவிய குகனின் வம்சத்தினர் நாங்கள் பிறரைச் சென்று தரிசிப்பவர்களில்லை. பிறரால் தரிசித்து வணங்கப்பட வேண்டியவர்கள் என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் குத்தலாகவும் ஆணவத்தோடும் என்னிடம் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது."

"உங்கள் விருப்பத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முயல்வேன் மகாராணி" என்ற மங்கம்மாளிடம் உறுதியளித்துவிட்டு காவிரி நீர்ப் பிரச்சினைக்காக உதவி புரிய வந்திருந்த தஞ்சைப் படைவீரர்களையும் சேர்த்துக்கொண்டு படையெடுப்பைத் தொடங்கினார் தளவாய் நரசப்பய்யா. பெரும்படை மதுரையை நோக்கி விரைந்தது. கிழவன் சேதுபதி இந்தப் படையெடுப்பை எதிர்பார்த்து ஆயத்தமாக

ரா-12