பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

ராணி மங்கம்மாள்

கடுமையான பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் மறவர் சீமை வீரர்கள் அடிபட்ட புலிபோல் சீறியெழுந்தனர். வயிற்றுப் பசியைவிட நாட்டைக் காக்கும் தன்மானம் பெரிதெனப் போரில் இறங்கினர் மறவர்கள். அந்தச் சிரமதசையிலும் சேதுபதியின் கட்டளையைத் தெய்வ வாக்காக மதித்து அதற்குக் கீழ்ப்பணிந்து போரிட்டனர். பஞ்சமும், பசியும் அவர்களது வீரத்தையும் விசுவாசத்தையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. பசியைவிட நாட்டைக் காக்கும் உணர்வு அவர்களிடம் பெரிதாக இருந்தது. அதன் விளைவாகத் தஞ்சை அரசன் ஷாஜியின் முயற்சி பலிக்கவில்லை. தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஓட ஓட விரட்டினார்கள் மறவர் சீமை வீரர்கள். தஞ்சைப் படைகளும் ஷாஜியும் அறந்தாங்கிவரை பின்வாங்கி ஓட நேரிட்டது. சேதுபதி அறந்தாங்கியை வென்று அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்.

தனக்கு ஓயாத தொல்லை கொடுத்துவந்த பல எதிரிகளை வெல்ல முடிந்தாலும் கிழவன் சேதுபதி என்ற மூத்த சிங்கத்திடம் மட்டும் ராணி மங்கம்மாளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சேதுபதி அஜாதசத்ருவாக இருந்தார். ராஜதந்திரத்திலும் சரி, வீரத்திலும் சரி, போர் முறைகளிலும் சரி, அவரை வெல்வது மிகவும் அரிதாக இருந்தது.

அவருடைய சுட்டுவிரல் எந்தத் திசையில் எப்படி அசைகிறதோ அப்படி நடந்து கொள்ள மறவர் நாடு முழுதும் ஆயத்தமாக இருந்தது. மறவர் நாட்டிலிருந்த இந்தக் கட்டுப்பாடும் விசுவாசமும் சேதுபதியின் வலிமைகளாக அமைந்திருந்தன. அவரை யாரும் எதுவும் செய்து வீழ்த்த முடியாத மூல பலம் மறவர் சீமையில் அவருக்கிருந்த செல்வாக்கில் குவிந்திருந்தது.

கிழவன் சேதுபதி விஷயத்தில், 'இனி எதுவும் நம்மால் முடியாது' என்ற முடிவுக்கு வந்தாள் ராணி மங்கம்மாள். தோல்வியை அவள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. கிழவன் சேதுபதியை தானோ மற்றவர்களோ வெல்ல முடியாது என்பதற்காகக் கவலைப் பட்டதைவிட வேறொன்றிற்காக அவள் அதிகம் கவலைப்பட வேண்டியிருந்தது. சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முடியவில்லையே