பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

183

சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார்.

கணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணிர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி.

தடியத் தேவர்மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மதமாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் தமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழுந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர்.

"என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது! இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது" என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும் படி உத்தரவிட்டார்.

வெளியூரில் சிறைப் பிடிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத் தேவரும் இராமநாதபுரத்தில்தான் இருந்தார். பாதிரியாரை எதுவும்