பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

195

கோடரிக்காம்பு போல் பேரன் நடந்துகொள்ளத் தலைப்பட்டது அவளை மீளாக் கவலையில் வீழ்த்தியது. விஜயரங்க சொக்கநாதனுக்கு அந்த பால்ய வயதிலேயே தன்னைப் பற்றித் துர்ப்போதனை செய்கிறவர்கள் யார் யாரென்று அறிந்து அவர்களை உடன் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி எடுத்துக் கொண்டாள் அவள்.

ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் மிக இரகசியமாகச் செயல்பட்டார்கள். "இப்படியே இன்னும் சிறிது காலம் நீ கோட்டை விட்டுக்கொண்டிருந்தால் உனக்கு ஆட்சியைத் தராமலே உன் பாட்டி உன்னை ஏமாற்றிவிடுவாள்! தானதருமங்கள் செய்தே அரண்மனை கஜானாவையெல்லாம் காலியாக்கிவிடுவாள்" என்ற துர்ப்போதனை விஜயரங்கனுக்கு இடைவிடாது அளிக்கப்பட்டு வந்தது.

அவன் அடிக்கடி பாட்டியிடம் வந்து சீறினான். எதிர்த்துப் பேசினான். தர்மசங்கடான கேள்விகளைக் கேட்டான். தனக்கு உடனே முடிசூட்டுமாறு வற்புறுத்தினான். பயமுறுத்தினான். வசைபாடினான். பாசத்துக்கும் ஆத்திரத்திற்கும் நடுவே சிக்கித் திணறினாள் ராணி மங்கம்மாள். அவளுடைய மனநிம்மதி இப்போது அறவே பறிபோய்விட்டது.


26. பேரனின் ஆத்திரம்

விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில்தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள்.