பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

ராணி மங்கம்மாள்

"எனக்கு அப்படித் தோன்றவில்லை! இந்தக் கலகம் தொடர்ந்து நடக்கும் என்றே படுகிறது."

"சிறுபிள்ளைகளுக்கு அவ்வப்போது ஏதேனும் புதிய விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கும். இரண்டு நாள் ஒன்றும் பேசாமல் இருந்தால் பின்பு மூன்றாவது நாள் அவர்களுக்கே அது மறந்து போய் விடும்."

"அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படிஇது அவனுக்கு மறந்து போய் விடும் என்று தோன்றவில்லை."

"இருக்கட்டுமே இளங்கன்று. அதனால்தான் பயமறியாமல் துள்ளுகிறது. கொஞ்சம் ஆறப்போட்டால் தானே மறந்து விடும்."

தளவாய் அச்சையா கூறியபடி விஜயரங்க சொக்கநாதன் எதையும் மறப்பான் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றவில்லை.

இங்கே அரண்மனையில் மற்றவர்களிடமும் மற்றும் வெளியே பிறர் பலரிடமும் விஜயரங்கன் கண்டபடி பேசி வருவதாகத் தெரிந்தது. ராணி மங்கம்மாள் பதவி வெறிபிடித்தவள் என்றும் அவளுக்கும் அச்சையாவுக்கும் கள்ளக்காதல் நிலவுகிறது என்றும் செய்திகளைப் பரப்பினான் விஜயரங்கன். சொந்தப் பாட்டி என்றுகூட நினையாமல் அவளை எதிர்த்து ஏறக்குறையப் போர்க்கொடியே உயர்த்தியிருந்தான் அவன். வதந்திகளாலும் குழப்பமான செய்திகளாலும் அரண்மனை நாறியது; குழம்பியது. கலங்கியது.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்களே இரண்டு விதமாகப் பேசினார்கள். "சொந்தப் பாட்டி என்றுகூடப் பாராமல் விஜயரங்கன் விசுவாசத் துரோகம் செய்கிறான்" என்று அவனைத் தூற்றினார்கள் சிலர்.

'நெருப்பில்லாமல் புகையுமா? இவளும் அச்சையாவுமாகச் சேர்ந்துகொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காகப் பேரப்