பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

205

பிள்ளையாண்டானை முடிசூடி அரசாளவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது' என்றும் பேசினார்கள் சிலர். இப்படி வம்புகளும் வதந்திகளும் பொறுமையைச் சோதிக்கிற அளவு வளர்ந்தன. அதை நீடிக்கவிடக்கூடாது என ராணி மங்கம்மாள் நினைத்தாள். விஜயரங்கனைக் கூப்பிட்டு மறுபடியும் கண்டிப்பாகப் பேசிவிடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

அவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவளுடைய கட்டளையைப் பொருட்படுத்தி வராமல் முதலில் அவன் அலட்சியப்படுத்தினான். மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினாள். வேண்டா வெறுப்பாகவும், கோபமாகவும் வந்தான். அவனை ராணி மங்கம்மாள் எதிர்கொள்ளும்போது தளவாய் அச்சையாவும் உடனிருந்தார். சிறிதும் மதிப்போ மரியாதையோ இல்லாமல் அவர்களிருவரையும் அலட்சியமாகவும் ஏளனமாகவும், இகழ்ச்சி தோன்றவும் ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

அவர்கள் முன் அவன் எதிர்கொண்டு வந்த விதமும் பார்த்த விதமும் வெறுப்பூட்டக் கூடியவையாக இருந்தன. அந்தப் பார்வையில் எரிச்சலடைந்தாள் ராணி மங்கம்மாள். எனினும் பொறுமையை இழந்துவிடாமல், "விஜயா! உன் போக்கு நன்றாக இல்லை சேர்வதற்குத் தகாத கெட்டவர்களோடு சேர்ந்து நீ வீணாகச் சீரழியப் போகிறாய்! அதற்கு முன் உன்னை எச்சரிக்கலாம் என்றுதான் கூப்பிட்டனுப்பினேன்" என்று அவனுக்கு அறிவுரை கூறினாள் அவள்.

"எனக்கு யாருடைய எச்சரிகையும் தேவையில்லை. என் ஆட்சி உரிமையான நாட்டை என்னிடம் ஒப்படைத்தாலே போதுமானது"

"தற்போது அது சாத்தியமில்லை அப்பா! குருவி தலையில் பனங்காயை வைத்தால் தாங்காது."

"நீங்கள் எதை எதையோ சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்!"