பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19

ராணியை அழைத்துக் கொண்டு பணிப்பெண்கள் அந்தப்புரத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

அழகாகக் கோலமிட்டு இருந்த தரையில் ஆரத்தி சுற்றிக் கொட்டிய பெண்ணிடம் ரங்ககிருஷ்ணன் புன்முறுவலுடன் வினவினான்.

“நீ வரைந்த கோலத்தை உன் ஆரத்தி நீரால் நீயே அழித்து விட்டாயே முத்தம்மா!”

“சில திருக்கோலங்களைக் காண வந்தால் இப்படிச் சொந்தக் கோலங்கள் அழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது இளவரசே!”

“மதுரை மாநகரத்தில் இருந்த சில நாட்களில் உன்னை ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை முத்தம்மா!”

“அப்படியானால் பல கணங்கள் மறந்திருந்தீர்கள் போலிருக்கிறது”.

“அழகான பெண்கள் குதர்க்கமான பேச்சுக்களைப் பேசக் கூடாது.”

“இன்னும் கொஞ்ச நேரம் உங்களைப் பேச அனுமதித்தால் குதர்க்கமாகப் பேசுகிறவர்கள் அழகாக இருக்கக்கூடாது என்று கூடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!”

“சொல்லலாம் தான்! ஆனால் அந்தத் தத்துவம் உனக்கு மட்டும் பொருந்தவில்லையே என்றுதான் தயங்க வேண்டியிருக்கிறது“ என்று கூறியபடியே அவளருகில் நெருங்கினான் ரங்ககிருஷ்ணன். அங்கங்கே நின்ற பணிப்பெண்கள் மலர் கொய்யப் போகிறவர்கள் போல் விலகி நந்தவனத்திற்குள் புகுந்தனர்.

“சற்று எட்டியே நிற்கலாம், திடீரென்று மகாராணியாரே வந்தாலும் வந்துவிடுவார்.”

“அந்தக் கவலை உனக்கு வேண்டாம் முத்தம்மா. அம்மா நீராடித் திருவரங்கத்திற்கும் மலைக்கோட்டைக்கும் முதலில் தரிசனத்திற்குச் சென்று விட்டுத்தான் வேறு பக்கம் திரும்பவே அவகாசமிருக்கும்.”