பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

ராணி மங்கம்மாள்

சகவாசத்திலிருந்து அவனை மீட்பதற்காகவே இந்த ஏற்பாடு அவசியம் என்ற எண்ணத்தில்தான் இது செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்டுக்காவல் ஏற்பாடு தொடங்கிய பின்னர் முதல் நாலைந்து நாட்கள் அவர்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்தன. விஜயரங்கன் அரண்மனையில் அவன் வசித்துக் கொண்டிருந்த பகுதியை விட்டு எங்குமே வெளியேற முடியவில்லை.

தாங்கள் நினைத்தபடி விஜயனை ஒடுக்கிவிட்டதில் அவர்களுக்குத் திருப்தியாயிருந்தது. விஜயனுடைய நன்மைக்காகவும் ஆட்சியின் நன்மைக்காகவும் அவர்கள் செய்த இந்தக் காரியம் விஜயனால் மிக மிகத் தவறாகவும் கடுமையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. தன் நன்மைக்காக என்று அவன் இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. பாட்டி தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவே உணர்ந்தான். அவன் அப்போதைக்கு ஆட்சியையோ அரச பதவியையோ அடையாமல் தடுக்கும் திட்டத்துடன் பாட்டி தன்னைச் சிறைப்படுத்திவிட்டாள் என்பதே இது பற்றி அவனது அநுமானமாக இருந்தது. வெளியே இருந்த அவனுடைய ஆட்களில் சிலர் ரகசியமாக அவனை வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இப்படியே செய்தியைத் தெரிவித்துப் பரப்பினான் விஜயரங்கள்.

அவன் மனநிலை இப்படி இருப்பதை அறியாமல் ராணி மங்கம்மாளும், தளவாய் அச்சையாவும் வேறு விதமாகத் தீர்மானித்துக் கொண்டார்கள்.

"அரண்மனைக்குள்ளேயே தங்க வைத்துத் தீயவர்களின் சகவாசத்தைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! விஜயரங்கன் இதற்குள் கெட்ட எண்ணங்கள் எல்லாம் மாறித் திருந்தியிருக்க வேண்டும். என்னைப்பற்றிக் கூட அவன் நல்லபடி புரிந்து கொண்டிருப்பான். இன்றோ நாளையோ அவனை மறுபடி பார்த்துப் பேசினால் அவன் மனநிலை நமக்குப் புரியலாம்” என்றாள் ராணிமங்கம்மாள்.