பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

209

"இதற்குள் அவன் முற்றிலும் மனம் மாறியிருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாமலும் இருக்கலாம் என்பதற்குச் சாத்தியக் கூறுகள் உண்டு. முன்னைவிட உங்கள் மேலும் என் மேலும் விரோதங்கள் அதிகமாகி இருக்கவும் நியாயம் உண்டு. எதற்கும் போய்ப்பார்க்கலாம். எனக்கென்னவோ இதில் நம்பிக்கையில்லை..." என்றார் தளவாய்.

"நீங்கள் அதிக அவநம்பிக்கைப் படுகிறீர்கள்! என் பேரப் பிள்ளையாண்டான் அவ்வளவு கெட்டவன் இல்லை. கேட்பார் பேச்சைக் கேட்டுத்தான் இவன் கெட்டுப்போயிருக்கிறான். இப்போது திருந்தியிருப்பான்."

அச்சையா இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அதேசமயம் அவரது மெளனம் ராணி மங்கம்மாள் கூறியதை ஏற்றுக் கொள்கிற மெளனமாகவும் இல்லை.

அடுத்தநாள் அதிகாலையில் வழக்கத்திற்குச் சிறிது முன்பாகவே எழுந்து நீராடி வழிபாடுகளை எல்லாம் முடித்து, "தெய்வமே என் பேரனுக்கு இதற்குள் நல்ல புத்தியைக் கொடுத்திருப்பாய் என்று நம்புகிறேன். தொடர்ந்து இனி மேலும் அவனுக்கு நல்ல புத்தியைக்கொடு" என்று பிரார்த்தனையும் செய்துவிட்டுச் சிறிது நேரத்தில் விஜயரங்கனைக் காண்பதற்குச் செல்லவேண்டும் என்றிருந்தாள் ராணி மங்கம்மாள்.

அப்போது காவலர்கள் பரபரப்பும் பதற்றமுமாக அவளைத் தேடி அங்கே ஓடிவந்தார்கள்.

"மகாராணி இளவரசர் காவலைத் தப்பிச் சென்றுவிட்டார். இரவோடு இரவாக எங்களுக்குத் தெரியாமலே இது நடந்துவிட்டது. நூலேணி ஒன்றின் உதவியால் மதிலில் ஏறி மதில் துவாரத்தின் வழியே அதே நூலேணியைப் பயன்படுத்தி மறுபக்கம் கீழே இறங்கி வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. எங்களைத் தப்பாக நினைக்கக்கூடாது" என்றார்கள் அவர்கள்.

ரா-14