பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

ராணி மங்கம்மாள்

நடந்தவற்றை அவளால் நம்பி ஒப்புக்கொள்ளக்கூட முடியமாலிருந்தது. ஆனால் நடந்ததோ, நடந்திருப்பதோ பொய்யில்லை. நிஜம்தான் என்பதும் நிதர்சனமாகப் புரிந்தது. சில நாட்களுக்குப்பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் அதுவும் நிறுத்தப்பட்டது.

தனது சிறைக்குள் ராணி மங்கம்மாள் எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போயிருந்தாள். அவளுடைய ராஜ கம்பீரப் பார்வை மங்கியிருந்தது. முகத்தில் கருமை தட்டியிருந்தது. கண்கள் குழி விழுந்திருந்தன. அந்தப்புரத்தின் அந்த ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய சோக நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின. நம்பிக்கை வறண்டது.

விஜயரங்கனும் சிறையில் வந்து அவளைப் பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அநாதரவாக அநாதையாக அவள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே அவளைச் சரிபாதி கொன்று விட்டிருந்தது. இத்தனை கொடுமைகளை அடைய, தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.

பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும்கூடத் தரலாகாது என்று கொடுமையாக உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள், அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறவே பயப்பட்டார்கள். இதில் தங்களுக்கு எதற்கு வீண் வம்பு என்று பேசாமல் இருந்தார்கள்.