பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ராணி மங்கம்மாள்

“மாமன்னர் சொக்கநாத நாயக்கருக்கும் ராணி மங்கம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றிய தாங்கள் படையெடுக்கத் தேசங்களும், எதிரிகளும் இல்லாமற் போயிற்றா என்ன? இப்படித் திடீர் திடீரென்று என்னைப் போல அபலைப் பெண்களின் மேல் படையெடுப்பது ஏனோ?”

“மன்மதன் காரணமாக இருந்து நடக்கிற ஆக்கிரமிப்புகள் எதிரிகளோடு நடப்பதில்லை பெண்ணே! பரஸ்பரம் இருவருமே ஜெயிக்கிற போருக்கு எதிரி ஏது? நண்பன் ஏது?”

“மதுரை மாநகரிலிருந்து உங்கள் பிரியத்துக்குரியவளுக்கு என்ன வாங்கி வந்தீர்களாம்?” - அவள் குரலில் பிணங்குவது போன்ற சிணுக்கம் ஒலித்தது. ரங்ககிருஷ்ணன் அவளது சின்ன இடையைத் தன் கரங்களால் வளைத்துத் தழுவினான். பின் தனது இடுப்பிலிருந்து பட்டுத் துணியாலான சுருக்குப்பை ஒன்றை எடுத்துப் பிரித்துப் பளீரென்று மின்னும் அழகிய பெரிய முத்துமாலை ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தான்.

“சின்ன முத்தம்மாவுக்குப் பெரிய முத்துமாலை.”

“இந்த முத்துமாலையை விட்டால் மதுரை மாநகரத்தில் வாங்கிவர வேறென்ன கிடைக்கப்போகிறது உங்களுக்கு?”

“நீ வாய்விட்டுக் கலீர் கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் உன் பல் முத்துக்களைப் பார்த்து இந்தப் புகழ்பெற்ற கொற்கை முத்துக்கள் அவமானப்பட்டுப் புழுங்கட்டுமே என்றுதான் இவற்றை வாங்கி வந்தேன்.”

“ஆகா! பிரமாதம்! பிரமாதம்! நீங்கள் இந்த இளவரசுப் பொறுப்பை விட்டுவிட்டு, கவி எழுதவே போகலாம்.”

“பாடுவதற்குரிய பொருளாக அல்லது பாத்திரமாக உன்னைப் போல் வசீகரமான பேரழகி ஒருத்தி கிடைப்பதாயிருந்தால் அதற்கும் நான் சித்தமாயிருக்கிறேன் முத்தம்மா!”

“அப்படியானால் ஓர் அழகான பெண் அகப்பட்டால் இருக்கிற பொறுப்புகளை எல்லாம் கைகழுவத் துணிவீர்கள் என்று சொல்லுங்கள்!”