பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி 219

பாட்டியாரைத் தாங்கள் இவ்வளவு கொடுமையாக நடத்தக்கூடாது. இன்று உங்களுக்குப் பயப்பட்டாலும் பின்னாளில் ஊர் உலகம் உங்களைப் பழிக்கும்."

"ஊர் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என் பாட்டி என்னைக் கொடுமைப்படுத்தியதற்கு பதிலாக அணு அணுவாய்ச் சித்ரவதை செய்யப்பட்டுச் சாக வேண்டும். இதற்கு எதிராக யார் நின்று தடுத்தாலும் கேட்க மாட்டேன். உங்கள் கீதோபதேசம் எனக்குத் தேவை இல்லை."

இவ்வளவு கடுமையாக அவன் கூறியபின் மெளனம் சாதிப்பதைத் தவிர அந்தப் படைத் தலைவருக்கு வேறு வழியில்லாது போயிற்று. முதல் முதலாக அறிவுரை கூறிய அந்த ஒரு படைத்தலைவருக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பார்த்தபின் வேறு யாரும் அப்புறம் வாய் திறக்கத் துணியவில்லை. அவன் இஷ்டப்பட்டபடி எப்படி வேண்டுமானாலும் செய்து தொலைக்கட்டும் என்று பேசாமல் இருந்து விட்டார்கள்.

விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாயிற்றேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்ரவதை செய்தே தொலைத்து விடுவது என்னும் வெறி அவனுள் மூண்டிருந்தது.

பாட்டியைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு பருகத் தண்ணீர் எதுவும் வழங்கலாகாது என்று முதலில் தடைவிதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான். அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கண்டவர்கள் எல்லாரும் மனம் வருந்தினார்கள். அருவருப்பு அடைந்தார்கள்.