பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

ராணி மங்கம்மாள்

களையும், அறச் சாலைகளையும் வேறு பல தானதர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்துவிட்டாள்.

பேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற் சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போன பின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்?

மகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.

தன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப்போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ்பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன. நின்று நிலவின. அவள் மரணத்தின்போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலகமுடியாத இருள் சூழ்ந்தது.


முடிவுரை

ராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின் படி விஜயரங்கசொக்கநாதன் ராஜ்யத்தின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பதுபோல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.