பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ராணி மங்கம்மாள்

கொண்டு, எதிரே தன் ஆசிகோரி வந்து வணங்கிய மகனைப் பார்த்ததும் ராணி மங்கம்மாள் அவனுக்கு ஆசி கூறி வாழ்த்திய பின் மேலும் கூறினாள்.

"மகனே! பாதுஷாவின் ஆட்களும் பழைய செருப்பும் நாளைப் பகலில் இங்கே வரக்கூடுமென்று தெரிகிறது. உனது திருமணத்திற்காகவும், முடிசூட்டு விழாவுக்காகவும் இங்கே வந்த படைத் தலைவர்களும், படைவீரர்களும் கோட்டையைச் சுற்றி நாலா பக்கமும் மறைந்திருப்பார்கள். நானும் சின்னமுத்தம்மாளும் சபைக்கு வராவிட்டாலும் உப்பரிகையில் அமர்ந்து சபையைக் கவனித்துக் கொண்டிருப்போம். உன்னுடைய இந்தப் பேரழகியான மனைவியின் கடைக்கண் பார்வையில் நீ உறுதியாக நடந்து கொள்ளத்தக்க நெஞ்சுரம் உனக்குக் கிடைக்கவேண்டும் என்று நான் உன்னை வாழ்த்துகிறேன்."

"தாயே! உங்கள் ஆசி கிடைக்குமானால் எத்தகைய எதிரியையும் வெல்லும் பலம் எனக்கு வந்துவிடும்."

"சொல்லிக் கொடுத்த வார்த்தைகளும், கட்டிக் கொடுத்த சோறும் அதிக நேரம் கெடாமல் இருக்காது மகனே என்று எந்த வேளையில் எப்படி எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று அன்று அந்தவேளையில் அப்போதே துணிந்து முடிவு செய்யும் மனோதிடம் உனக்கு வந்தாலொழிய ராஜ்ய பாரத்தைத் தாங்க உன்னால் முடியாது.”

"நீங்கள் உடனிருக்கும்வரை எனக்கு எதுவும் சிரமமில்லை தாயே!” என்று மீண்டும் வணங்கினான் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன்.

ராணி மங்கம்மாள் சிரித்தபடியே சின்ன முத்தம்மாளைப் பார்த்துக் கூறலானாள்:

"முத்தம்மா! இளவரசரைக் கெட்டிக்காரியும் பேரழகியுமான உன்னைப் போன்ற பெண் ஒருத்தியிடம் ஒப்படைத்திருக்கிறேன். இளவரசரின் வீரத்தையும், செருக்கையும் தன்மானத்தையும் வளர்ப்பதாக உன் அழகு அமைய வேண்டும்! கெட்டிக்காரத்தன மில்லாத