பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

41

ஆயத்தமாக வேண்டும் என்பதைச் சொல்லவே உன்னை நானும் இராயசமும் இங்கே அழைத்தோம்."

இராயசம் எழுந்து நின்றார். கம்பீரமும் அழகும் வசீகரமும் நிறைந்த அவரது தோற்றத்தைப் பார்த்து ராணியே ஒருகணம் யாரோ புதியவர் ஒருவரைக் காண்பது போல் உணர்ந்தாள்.

"இந்த மறவர் சீமைப் படையெடுப்புக்கு உங்கள் இருவர் ஆசியும் வேண்டும்" என்று வணங்கினான் முத்துவீரப்பன்.

"மிகப்பெரிய படிப்பாளியாகிய நம் இராயசம் உன்னை வாழ்த்தினாலே போதுமானது மகனே" என்றாள் மங்கம்மாள். இராயசம் அச்சையா ராணியை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.

முத்து வீரப்பன் ஆஜானுபாகுவாக எழுந்து நின்ற இராயசம் அச்சையாவையும் அன்னை ராணி மங்கம்மாளையும் வணங்கி விடைபெற்றான். அவன் வணங்கித் தலை நிமிரவும் அரண்மனை வீரன் ஒருவன் பரபரப்பாக அங்கு உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. வந்த வீரன் வணங்கி விட்டு மூவரையும் பார்த்துச் சொல்லலானான்.

"இராமநாதபுரத்திலிருந்து இரகுநாத சேதுபதியின் தூதன் ஒருவன் தேடி வந்திருக்கிறான்."

மூவரும் தங்களுக்குள் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆவலும் பரபரப்பும் முந்திய மனநிலை யோடு, "உடனே அவனை இங்கே அழைத்துக் கொண்டுவா!" என்று சேதி கொண்டு வந்தவனுக்கு மறுமொழி கூறினான் முத்து வீரப்பன்.

"வருகிற தகவலில் நாம் மகிழ்ச்சியடையவோ, நமது முடிவை மாற்றிக் கொள்ளவோ காரணமான எதுவும் இருக்கப்போவதில்லை" என்று பதறாத குரலில் நிதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அச்சையா. ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனும், ராணி மங்கம்மாளும் சேதுபதியின் தூதன் வரவேண்டிய நுழைவாயிலையே பார்த்த வண்ணமிருந்தனர்.