பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. பக்கத்து வீட்டுப் பகைமை

ட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரியநிறமும் கொண்ட மறவர் சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.

மின்னலைப்போல் சரேலென்று உள்ளே நுழைந்த அவன், "மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதியின் தூதன் நான். இது அவர் அனுப்பிய ஓலை" என்று இராயசம் அச்சையாவிடம் நீட்டிவிட்டு மூன்று பேருமே எதிர்பாராத வகையில் பதிலை எதிர்பாராமலே விருட்டென்று திரும்பிச் செல்லத் தொடங்கினான். சம்பிராதாயத்துக்குப் புறம்பாகவும், பண்பாடின்றியும் இருந்தது அவனது அச்செயல்.

உடனே அதைக் கண்டு ஆத்திரமடைந்த ரங்ககிருஷ்ணன் பின்தொடர்ந்து அவனைப் பாய்ந்து கைப்பற்ற முயன்றபோது சைகையால் இராயசம் அவனைத் தடுத்து விட்டார். ஆத்திரத்தோடு ரங்ககிருஷ்ணன் கேட்டான்:

"வழக்கமில்லாத புதுமையாக நமக்கு அடங்கிய சிற்றரசன் 'மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி' என்றான். அனுப்பிய ஓலையைப் படிப்பதற்கு முன்பே திரும்பிப்போகிறான். இதெல்லாம் என்ன? இதைவிட அதிகமாக நம்மை வேறெப்படி அவமானப்படுத்த முடியும்? இந்த முறைகேட்டையும், அவமானத்தையும் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?"

"பொறுத்துக் கொள்ள வேண்டாம்தான் எய்தவனிருக்க அம்பை நொந்து பயனென்ன ரங்ககிருஷ்ணா? சேதுபதியிடம் தொடுக்க வேண்டிய போரை அவனுடைய தூதனிடமே தொடுக்கவேண்டாம் என்று தான் உன்னைத் தடுத்தேன்" என்று ரங்ககிருஷ்ணனுக்கு மறுமொழி கூறிவிட்டு இரகுநாத சேதுபதியின்