பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43

ஓலையைப் படிக்கத் தொடங்கினார் அச்சையா. முதலில் மெல்லத் தமக்குள் படிக்கத் தொடங்கியவர், பின்பு, இரைந்தே வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினார்:

"இன்று இவ்வோலை எழுதும்போது தொடங்கி மறவர் நாடு இனி யார் தலைமைக்கும் கீழ்ப்பணிந்து சிற்றரசாக இராது என்பதை இதன்மூலம் மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி சம்பந்தப் பட்ட சகலருக்கும் பிரகடனம் செய்து கொள்கிறார்."

"குமாரப்ப பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் கொன்றது போதாதென்று சுயாதீனப் பிரகடனம் வேறா?"

ராணி மங்கம்மாள் இவ்வாறு வினவியவுடன் "எவ்வளவு திமிர் இருந்தால் அதை நமக்கே ஓலையனுப்பித் தெரிவித்து விட்டு நம்முடைய மறுமொழியை எதிர்பாராமலே தூதுவனைத் திரும்பியும் வரச்சொல்லிப் பணித்திருக்க வேண்டும்? குமாரப்ப பிள்ளையை அவர்கள் கொன்றது நியாயமென்றால் இப்போது இங்குவந்து சென்ற இந்தத் தூதுவனை நாம் மட்டும் ஏன் தப்பிப் போகவிடவேண்டும்?" என்று கொதிப்போடு கேட்டான் ரங்ககிருஷ்ணன், கிழவன் சேதுபதி என்னும் பட்டப் பெயரை உடைய ரகுநாத சேதுபதியிடமிருந்து வந்திருந்த ஓலையைப் படித்துச் சொல்லிவிட்டு மேலே எதுவும் கூறாமல் இருந்த அச்சையா இப்போது வாய் திறந்தார்:

"ஒரு தவற்றை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தி விடமுடியாது ரங்ககிருஷ்ணா!"

"பல தவறுகள் நடந்து விட்ட பின்பும் இப்படிப் பொறுமையாக இருந்தால் எப்படி?"

"எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அநுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்னைவிட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான். நமது நிதானம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கட்டும்."