பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ராணி மங்கம்மாள்

"டில்லி பாதுஷாவின் ஆட்கள் பழைய செருப்புடன் ஊர்வலம் வந்தபோது அம்மாசொல்லிய அதே அறிவுரையைத்தான் இப்போது நீங்களும் கூறுகிறீர்கள் ஐயா!"

"சொல்லுகிற மனிதர்கள் வேறுபட்டாலும் அறிவும், அறிவுரையும் வேறுபடுவதில்லை மறவர் நாட்டின்மேல் படையெடுத்தாக வேண்டுமென்ற நமது முந்திய முடிவுக்கும் இந்த அறிவுரைக்கும் தொடர்பு இல்லை. உனது முன்கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துச் செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத்தான் இந்த அறிவுரை."

"ஆமாம் ரங்ககிருஷ்ணா இராயசம் சொல்வதெல்லாம் உன் நன்மைக்குத்தான் அப்பா! எதிரியை விட்டு விட்டு அவனுடைய தூதனை அழிப்பதால் என்ன பயன் விளையப் போகிறது? கிழவன் சேதுபதியை இப்படியே விட்டுவிட்டால் அவர் மற்றவர்களைக் கூட்டுச்சேர்த்துக் கொண்டு படையெடுத்து நமது மதுரைச்சீமையைக் கைப்பற்ற முயலுவார்" என்றாள் மங்கம்மாள்.

"இன்றே நமது படைகளோடு மறவர் சீமைக்குப் புறப்படுகிறேன் அம்மா"

"உனது வீரத்தில் நிதானமும் நிதானத்தில் வீரமும் கலந்திருக்கட்டும் அப்பா கிழவன் சேதுபதி மிகவும் சிக்கலான எதிரி. தெளிவான எதிரியில்லை. சிக்கலான எதிரிகளிடம் எப்போதுமே அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.'

"உங்கள் அறிவுரை எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும் அம்மா!"

திரிசிரபுரம் கோட்டையின் முகப்பில் படைகள் திரண்டன. போர்முரசு முழங்கியது. குதிரைகளும், யானைகளும் தரையைத் துவைத்துக் கிளரச் செய்த புழுதிப்படலம் விண்ணை மறைத்தது. தாயும், இராயசம் அச்சையாவும் வாழ்த்த, சின்ன முத்தம்மாள் நெற்றியில் வீரத் திலகமிட்டு வழியனுப்ப ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் படையோடு புறப்பட்டான். ரங்ககிருஷ்ணனுக்கும் படைவீரர்களுக்கும் திரிசிரபுரத்து மக்கள் மலர் மாரி பொழிந்து விடை