பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி

ங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர் பார்த்திராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக் கோட்டையிலும் இருந்த படை வீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக் கூடியதுதான் என்று தோன்றியது. அரசு என்ற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும் அமைந்திருந்தது.

ஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும்கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனத்தில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக்கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்திருந்தார்களோ என்று கூடஇப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.

தன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழு நம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து வெல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்லமெல்லப் புரிந்தது. தீர்க்கதரிசனம் பிடிபடாதவரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவை யாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்கதரிசனம் மிக மிக முக்கியமென்றும் புரிந்தது.