பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ராணி மங்கம்மாள்

இன்னும் பொழுது சாயவில்லை என்றாலும் மானா மதுரையிலேயே அவர்கள் தங்கினார்கள். மறவர் நாட்டு எல்லைப் பகுதிக்கு அப்பால் நள்ளிரவுத் தங்கலை வைத்துக்கொள்வதற்குப் பதில் மானாமதுரையிலேயே தங்கிக் கொண்டுதான் படையோடு வந்திருப்பதை ஒரு குதிரை வீரன் மூலம் இராமநாதபுரத்திலுள்ள சேதுபதிக்கு முன்தகவலாகச் சொல்லிவர அனுப்பலாமென்று தீர்மானித்து அதன்படி செய்திருந்தான் ரங்ககிருஷ்ணன்.

போய் வருகிற வீரன் திரும்பி, என்ன தகவல் கொண்டு வருகிறானோ அதற்கேற்ப மறுநாள் முடிவு செய்யலாமென்று, ரங்ககிருஷ்ணன் அபிப்பிராயம் கொண்டிருந்தான். எதிர்ப்பேயில்லாத பிரதேசத்திற்குள்ள படை நடப்பைத் தொடருவதா கூடாதா என்று குழப்பமாயிருந்தது அவனுக்கு.

நிலவுகிற இந்த அமைதி சகஜமானதா, தந்திரமானதா என்று வேறு புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. ஓர் எதிர்ப்பும் எங்கும் இராதென்று நினைத்துப் படையெடுத்து வருபவர்களை நாட்டுக்கு உள்ளே வெகுதூரம் வரவிட்டுக் கொண்டு பாதியில் மடக்கித் தாக்குவதற்குச் சேதுபதி சதி செய்கிறாரோ என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. நிலைமை கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருந்தது. எதுவுமே புரியவில்லை. இராமநாதபுரத்துக்கு நேரில் போயிருக்கும் குதிரை வீரன் திரும்பினால் ஒருவேளை ஏதாவது விவரம் புரியலாம். அவன் திரும்புகிற வரை மேற்கொண்டு எதுவும் செய்வதில்லை என்று அந்தரங்கமாக முடிவு செய்துகொண்டு ரங்ககிருஷ்ணன் மானாமதுரையிலேயே தங்கி இருந்தான்.

அன்று பொழுது சாயும் நேரத்துக்கு முன் ஊர் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாமல் தானே அறிந்துவரச் சென்றான் அவன். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மறவர் சாவடி ஒன்றினருகே ஒரு மரத்தடியில் இரண்டு மறவர்குலப் பெண்கள் நெல்லுக்குத்திக் கொண்டிருந்தார்கள்.