பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ராணி மங்கம்மாள்

என்று கேட்டு விட்டு அர்த்தபுஷ்டியோடு ரங்ககிருஷ்ணனின் முகத்தை ஏறிட்டு நோக்கிப் புன்னகை புரிந்தார் சேதுபதி. அந்தப் புன்னகை வெறும் புன்னகையா நமட்டுச் சிரிப்பா என்று வகைப் படுத்த முடியாதபடி இருந்தது. ரங்ககிருஷ்ணன் தொடர்ந்தான்.

"புரிந்து கொள்ளாமலே புரிந்து கொண்டுவிட்டதாக நினைப்பதும் புரிந்துகொண்டு விட்டும் புரியமுடியாத சூழ்நிலைகளில் தவிப்பதும் இரு தரப்புக்குமே நல்லதில்லை..."

"அத்தகைய இரண்டுங்கெட்டான் நிலைமை என்றும் எதிலும் எனக்கு இன்று வரை ஏற்பட்டதில்லை சின்ன நாயக்கரே"

"இங்கே சபையில் பேச முடியாது தனியே போய் நாம் பேசியாக வேண்டும்."

"இப்படிப் பதற்றமும், பரபரப்பும், வாலிப வயதுக்குரியவை சின்ன நாயக்கரே! பதற்றமும், பரபரப்பும் நீங்கி உணர்ச்சிகள் பக்குவப்பட அநுபவ முதிர்ச்சிதான் உதவமுடியம்."

"அறிவுரை கேட்டுக் கொள்ள நான் இங்கு வரவில்லை."

"ஆத்திரப்பட்டுப் பயனில்லை, சின்ன நாயக்கரே இன்னும் சிறிது நேரத்தில் என்னோடு விருந்துண்ணப் போகிறீர்கள். அப்போது தனியாக அந்தரங்கமாக நாம் இருவர் மட்டுமே இருப்போம். எல்லாம் பேசிக்கொள்ளலாம். பொதுவாகச் செயலில் காட்டமுடியாத ஆத்திரத்தை வார்த்தைகளில் காட்டி வீணாக்குபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் உங்களைப் பற்றி மட்டும் கொஞ்சம் கவலைப்படுகிறேன். சின்ன நாயக்கரே!"

"இதற்கு என்ன அர்த்தம்?"

"புரிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களைச் சொல்லிக் கொடுத்தா விளக்குவது சின்னநாயக்கரே!"

"வார்த்தைகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிரிகளை மர்மமாகத் தாக்கும் கலை எனக்குப் புதியது புரியாதது."

சேதுபதி இதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு நிதானமாகச் சொல்லலானார்.