பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71

பெயர்பெற்ற சேது நாட்டில் இன்னும் அத்தனை அறிவுப் பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை."

"துரதிர்ஷ்டவசமாகச் சோற்றுப் பஞ்சத்தைப் போல் அறிவுப் பஞ்சம் கண்களுக்குத் தெரிவதில்லை."

"இந்த விருந்திலே இல்லாத கசப்புச்சுவையை உண்டாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று சின்ன நாயக்கர் கங்கணம் கட்டிக்கொண்டு வந்து இங்கே உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது."

சேதுபதி அதிராமல், அயராமல், பதற்றமின்றிச் சிரித்த படிதான் உரையாடினார். விஷயங்களால் பாதிக்கப்பட்ட பரபரப்பும், பதற்றமும், ஆத்திரமும் ரங்ககிருஷ்ணனின் குரலிலும் வார்த்தைகளிலும் உண்டாக்கியிருந்த சூட்டைப் போன்றதொரு சூட்டை, சேதுபதியின் குரலிலோ, வார்த்தைகளிலோ காணமுடியவில்லை.

உடனே கோபமும், ஆத்திரமும் பட்டுவிடாத இந்த ராஜதந்திர அடக்கத்தைத்தான் 'பொள்ளெனப்புறம் வேர்க்காதிருத்தல்' எனத் தன் தாய் அடிக்கடி கூறுகிறாள் என்பது இப்போது ரங்க கிருஷ்ணனுக்குத் தோன்றியது.

சேதுபதியின் உரையாடல் இப்படி ரங்ககிருஷ்ணனுக்குத் தன் தாய் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்றை நினைவுபடுத்தியது. தொடர்ந்து சேதுபதியிடம் சொல்லிக் கொண்டேபோனான் அவன்.

"சொல்லாமல் கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடு திடீரென்று தனக்குத்தானே சுயாதீனமாவது கூட அறிவுப் பஞ்சமில்லாததால்தான் நடக்கிறது போலும்."

"இதற்கு ஆமென்றும் பதில் சொல்லலாம். இல்லையென்றும் பதில் சொல்லலாம். ஆனால் இல்லையென்று பதில் சொல்லத் தன்மானம் தடையாயிருக்கிறது. ஆம் என்று பதில் சொல்லத் தன்னடக்கம் தடையாயிருக்கிறது சின்னநாயக்கரே."

ரங்ககிருஷ்ணனிடம் அப்போது வார்த்தைகளையே கூராகத் தீட்டிப்பிரயோகித்து ஒரு ராஜதந்திரப் போரை நடத்தினார் சேதுபதி.