பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ராணி மங்கம்மாள்

மீனாட்சி கல்யாணம் முடிந்து தேர் நிலைக்கு வந்து மகிழ்ச்சி நிறைவடையு முன்னே ஆற்றில் அழகர் வந்து இறங்குகிறார். தென்னாடு முழுவதும் குழந்தை குட்டிகளோடும் மனைவி மக்களோடும் தத்தம் சொந்த ஊர்களிலிருந்து ஒழித்துக்கொண்டு மதுரையிலே கூடிவிட்டாற்போல் நகரம் முழுவதும், சுற்றுப்புறங்களிலும் எள் விழ இடமின்றி மக்கள் கூடிவிட்டார்கள். நிறைய விருந்தனர் வந்திருக்கும் வீட்டில் எப்படி அதிகக் கலகலப்பும், பரபரப்பும், மகிழ்ச்சியும், உபசரணைகளும், உல்லாசமும் நிரம்பியிருக்குமோ அப்படி நகருக்கே உல்லாசம் வந்துவிட்டது போலிருந்தது; நகருக்கே விருந்து வந்தது போலிருந்தது.

பூக்கள் தீபதூப வாசனைகளின் நறுமணமும் வாத்தியங்களின் இன்னொலியும், ஆரவாரங்களின் அழகும், அலங்காரப் பந்தல்கள், அழகுத் தோரணங்களின் காட்சியும் நகரையே இந்திரலோகமாக்கியிருந்தன. சித்திரா பெளர்ணமி நகரையே சிங்கார புரியாக்கியிருந்தது. எங்கும் ஆரவாரம், எங்கும் மகிழ்ச்சி, எங்கும் விழாக்கோலம்.

இப்போது இந்த விழாவுக்காகவே ராணி மங்கம்மாளும், இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் திரிசிரபுரத்திலிருந்த்து தமுக்கம் அரண்மையிலே வந்து தங்கியிருக்கிறார்கள். தமுக்கம் ராஜகிருஹத்திற்கு இப்போது புதுமணப் பெண்ணின் பொலிவு வந்திருக்கிறதென்றால் மகாராணியும் இளவரசரும் வந்து தங்கியிருப்பது தான் அதற்குக் காரணமாக இருந்தது.

நேற்று மீனாட்சி கல்யாணத்தைத் தரிசித்தாயிற்று. ஆற்றில் அழகர் இறங்குவதைக் கண்டு வணங்கிவிட்டு மகாராணியும், இளவரசரும் திரிசிரபுரத்திற்குத் திரும்பிவிடக் கூடுமென்று தெரிகிறது.

ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி ஆற்றின் கரைக்கு வந்ததும் குதிரை வாகனத்திற்கு மாறித் தரிசனமளித்தார் கள்ளழகர். காலை இளங்கதிரவனின் செம் பொன்னொளி பட்டு அழகரின் குதிரை வாகனம் மின்னுகிறது. இது வையை ஆறா அல்லது மக்கள்