92 38 இராமன் - பன்முக நோக்கில் இலக்குவனிடம்கூட விதியின் பிழையே பிழை, இதற்கு என்னை நீ மனம் நோவது என்று கூறி உணர்ச்சிக்கு இடங்கொடுத்தல் தவறு என்று அறவுரை கூறிய இராகவனா இப்படித் துயர் அடைகிறான்? அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து, தேவர்க்கும் உதவி செய்த நான்கு மக்களைப் பெற்று அனைவருக்கும் திருமணம் முதலியவற்றைச் செய்து தன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகுதானே தசரதன் உயிர் நீத்தான்? அப்படியிருக்க அவன் இறந்தமை குறித்து இராமன் இவ்வளவு துயரம் காட்டுவதும் உணர்ச்சிவசப்படுவதும் முறையா என்றால், ஒருவிதத்தில் முறைதான் என்றே சொல்லவேண்டும். வான்மீகி உள்படப் பலர் இயற்றிய இராமாயணங்களும் கூறாத முறையில் கவிச் சக்கரவர்த்தி கம்பன் இராமனைப் படைக்கிறான். ஒரே சமயத்தில் பரம்பொருளாகவும், இராமன் என்ற மனிதனாகவும் இருக்குமாறு செய்து காப்பியத்தை நடத்திச் செல்கிறான் கவிஞன். தான் யார் என்பதை இராமன் நினைத்ததாகவோ, அறிந்ததாகவோ, உணர்ந்ததாகவோ கம்பன் காட்டவேயில்லை. பெரும்பாலான இடங்களில் இராமன் மனிதனாகத்தான் நடந்துகொள்கிறான். மனிதனாக என்னும்பொழுது சராசரி மனிதனாக இல்லாமல் மாமனிதனாக நடந்துகொள்கிறான். மாமனிதனாக என்னும் பொழுது சிற்சில சமயங்களில் சராசரி நிலைக்கு வந்துவிடும் இராமனை அழகாகப் படைப்பான் கம்பன். இவ்வாறு செய்யாமல் கடவுளாகவே படைத்திருந்தால் மக்களுக்கு உதாரணமாக அவன் இருந்திருக்க முடியாது. மனிதகுலத்திற்கே ஒருவன் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமானால், அவன் ஒரளவாவது சாதாரண மனிதர்களுக்கு உரிய உணர்ச்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாத்திரத்தோடு நாம் ஒன்றமுடியும். இதை மனத்துட்கொண்ட கம்பன் இதே போன்ற பல இடங்களை உருவாக்கி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை