பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 38 இராமன் - பன்முக நோக்கில் இருக்கும் தம்பியை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் பரதனைச் சுட்டிக்காட்டி, பின் பிறந்தோன் மூவரிலும் பரதனே உத்தமன் என்று சொல்லவேண்டிய தேவை என்ன என்று சிந்தித்தால், ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது. வனத்திடை வந்த பிறகு, பரதனைச் சந்தித்த பிறகு வெகு வேகமாக இலக்குவன் மனமும் அறிவும், நல்ல வளர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்று விட்டன என்பதில் ஐயமில்லை. என்றாலும், அடுத்தடுத்து வந்த துன்பங்களிலும் துயரங்களிலும் இராமனே கலங்கிப் போன நிலையில் தான் இருந்து அவனைச் சமாதானம் செய்வதால் இராமன் ஒருவாறு அமைதி அடைந்துள்ளான் என்ற நினைவு இலக்குவன் மனத்தில் ஊடாடி யிருக்க வேண்டும். அத்தகைய ஒர் எண்ணம் வந்தால் நியாயமானதே ஆகும். பின் பிறந்தார் மூவரிலும் உடனிருந்து துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் தான் அந்த இருவரிலும் ஒருபடி உயர்ந்தவன் என்ற எண்ணம் இலக்குவன் மனத்தின் அடித் தளத்தில் எங்கோ தோன்றியிருக்க வேண்டும். இலக்குவ னுடைய எண்ண ஓட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டேவரும் இராகவன், இலக்குவனுடைய நல்ல மனத்தில் இந்தச் சிறுகுறை (ஒரளவு ஆணவம் என்றும் சொல்லலாம்) முளைவிடத்துவங்கியதை அறிந்துகொண்டான் இராகவன். இப்பொழுது சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அண்ணனிடம் பக்தி செலுத்துவதில் தன்னைவிடச் சிறந்தவர் இல்லை என்ற கருத்தில்தான் சுக்கிரீவனை எடை போடுகிறான் இலக்குவன். அண்ணனைக் கொல்லச் சதி செய்யும் தம்பி, தன்னால் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அப்படிப்பட்ட ஒருவனுக்கு அண்ணன் தஞ்சம் அளித்ததை இலக்குவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அண்ணனைக் கொல்லச் சதி செய்யும் ஒருவன், தங்களைப் போன்ற முன்பின் தெரியாத வர்க்கு எப்படி உதவியாக இருக்க முடியும்? எனவே, சந்தர்ப்பம் நேர்ந்தபொழுது இதை அண்ணனிடம் நேரே கூறியும் விட்டான். (3976)