உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 227 "மற்று, இனி உரைப்பது என்னே ? வானிடை, மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார், தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது என்காதல் சுற்றம், உன் சுற்றம், நீ என் இன் உயிர்த்துணைவன்" என்றான். - கம்பு 3812 இந்த இரண்டு பாடல்களும் சுக்கிரீவன் நிலையைக் கண்டு இரங்கிய இராமன் பேசியவை ஆகும். நடுவு நிலையில் நின்று இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்பொழுது எல்லையற்ற வியப்புத் தோன்றுகிறது. சுக்கிரீவனுடன் பழகிய அரைநாழிகைப் பொழுதில் அவன் யார், அவன் அண்ணன் யார், என்ன காரணத்தால் இவர்களுள் பகைமை மூண்டது என்ற விபரம் ஒரு சிறிதும் தெரியாத நேரத்தில் சுக்கிரீவனுடைய வார்த்தைகளை மட்டும் நம்பிக்கொண்டு இந்த அளவுக்கு வாக்களித்தல் எப்படி நியாயமாகும்? எல்லாவற்றையும்விடத் "தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்' நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் என்று இராகவன் சிந்தியாமல் பேசினானா என்ற வியப்பு அடங்குமாறு இல்லை. தன்னை இன்னார் என்று அறிமுகம் செய்துகொள்வதற்கு முன்னரே 'ஆருயிர் துறக்கலாற்றேன்; சரண் உனைப் புகுந்தேன்' என்று சொல்லிய சொற்கள் சரணாகதியை உயிரினும் மேலாக மதிக்கும் இராமனுடைய உள்ளத்தில் மிகப் பெரிய பாரத்தை ஏற்றிவிட்டது. சரணம் என்று அடைந்தவன் நல்லவனா, தீயவனா, இன்று வந்தானா, நேற்று வந்தானா, என்னுடைய தாய் தந்தையரைக் கொன்று வந்தவனல்லவோ இவன் என்றெல்லாம் வினாக்களை எழுப்பாமல் சரணாகதி அளிக்க வேண்டும் என்று வீடணன் அடைக்கலம் பற்றிய நிகழ்ச்சியில் இராமனே பேசுகிறான். ஆதலால், சுக்கிரீவன் சரணம் என்று
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/247
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை