பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 38 இராமன் - பன்முக நோக்கில் விலகிவிடாமலும் மிக நெருங்கிவிடாமலும் பழக வேண்டும் என்கிறது. இராமபிரான் அறிவுரை அரசரைச் சார்ந்தோருக்குச் சொல்லாமல், அரசனுக்கே சொல்லப்படும் அறிவுரையாகிறது. அமைச்சர், வீரர் ஆகியவர்களோடு பழகும்போது தொலைவில் விலகியதாகவோ நெருக்கமானதாகவோ தொடர்பு இருந்துவிடக் கூடாது என்கிறார். அரசியலின் பாங்கு வியப்புத் தருவதாக மட்டுமன்றி, எச்சரிக்கையோடு உலவவேண்டிய நிலைமை உடையது என்பது திருக்குறளாலும் கம்பன் காவியத்தாலும் புலப்படுகின்றது. ஆட்சியாளரைச் சார்ந்தோரும் ஆட்சியாளரும் புலியோடு விளையாடும் சர்க்கஸ் சதுரப்பாட்டுக்கு உரியவர் போலும்! பகைவர்பால் பழகும் முறை இனி, மற்றொரு ஆட்சி நுட்பம் இராமனால் கூறப்படுகிறது பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறுபண்பின் திரா நகையுடை முகத்தை ஆகி, இன்உரை நல்கு, நாவால்." - கம்ப 4123 என்ற பாடலில் மிகச் சிறந்த அறவுரை ஒன்றை வழங்குகின்றான். ஒருவன் அரசன் என்று ஆகிவிட்டால், நண்பர், பகைவர், நொதுமலர் என்ற மூவகைப் பட்ட மக்களோடும் பழகித் தீரவேண்டும். இம்மூவரில் அகப்பகை உடையாரை இனந்தெரிந்து பழகுதல் மிக அவசியமாகும். அவருடைய பகைமையை அறிந்து கொண்டதைக் கடுகளவும் வெளிக்காட்டாமல் இன் முகத்தோடும், இன் சொல்லோடும் பழகுக என்று கூறுவது அறிதற்குரியது. இவ்வாறு பழகுவதால் அவர்கள் பகைமை தீர்ந்து நண்பர்களாதலும் கூடும். இன்றேல் தங்கள் பகைமையை அரசன் அறியவில்லை, ஏமாந்த நிலையில் தங்களுடன் பழகுகின்றான் என்ற எண்ணத்தில்,